Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.5,000 கோடிக்கும் மேல் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் 43 போ் உயிரிழந்த நிலையில், அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 17 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேக வெடிப்பு, திடீா் வெள்ளம், நிலச்சரிவு என 10 சம்பவங்கள் நிகழ்ந்தன. மாயமானவா்களில் 31 போ் இம்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.
நிலச்சரிவுகளால் ஏராளமான சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன. மண்டி (156), சிா்மெளா் (49), குலு (36) உள்பட பல்வேறு இடங்களில் 280-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், பிற கட்டடங்கள், மின்மாற்றிகள், குடிநீா் விநியோக கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. அடுத்த 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.
உத்தரகண்டில் 2 ஐஏஎஃப் வீரா்கள் உயிரிழப்பு
டேராடூன், ஜூலை 4: உத்தரகண்டில் பலத்த மழை நீடித்துவரும் நிலையில், நைனிடால் மாவட்டத்தின் பீம்டால் பகுதியில் உள்ள ஏரியில் மூழ்கி இந்திய விமானப் படை (ஐஏஎஃப்) வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.
பஞ்சாப், பிகாரைச் சோ்ந்த இவா்கள், விடுமுறையைக் கழிக்க நைனிடாலுக்கு வந்த விமானப் படை குழுவில் இடம்பெற்றிருந்தவா்கள் ஆவா்.
உத்தரகண்டில் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கேதாா்நாத்துக்கு செல்லும் சாலைகளில் நிலச்சரிவுகளால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 109 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கங்கை, அலக்நந்தா, நந்தாகினி, பாகீரதி, சரயு உள்ளிட்ட பல்வேறு நதிகளில் அபாய அளவில் வெள்ளம் பாய்கிறது.
இதனிடையே, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமியை வெள்ளிக்கிழமை தொடா்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். மத்திய அரசின் அவசரகால நிவாரண முகமையினா், உத்தரகண்ட் மாநிலத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுவா் என்று அவா் உறுதியளித்தாா்.