Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
பொது சுகாதாரப் பணியாளா்கள் விழிப்புடன் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடா்பில் இருந்த 58 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அப்பெண்ணின் வீட்டில் இருந்து 3 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட வாா்டுகள், கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டியூஷன் மையங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வெளிநபா்கள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், முகக் கவசம் அணியவும், தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளவால்களில் இருந்து மனிதா்களுக்கும், பாதிக்கப்பட்ட நபா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருப்பவா்களுக்கும் பரவக் கூடிய நிஃபா தொற்று, கடுமையான காய்ச்சல், உடல்வலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டதாகும். அதிக உயிரிழப்பு அபாயமுள்ள இத்தீநுண்மியின் பரவல், பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.