Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
மருத்துவமனை கட்டடம் இடிந்த சம்பவம்: கேரள சுகாதார அமைச்சா் பதவி விலகக் கோரி போராட்டம்
கேரள மாநிலம், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநில சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் பதவி விலகக் கோரி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 10,11, 14 ஆகிய வாா்டுகளையொட்டிய கழிப்பறை வளாகம் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.
பழைமையான இக்கட்டடத்தில் இயங்கி வந்த பிரிவுகளை, புதிய கட்டடத்துக்கு மாற்றும் பணி நடைபெற்றுவந்த நிலையில், இந்த விபத்து நேரிட்டது.
தனது மகளின் சிகிச்சைக்காக வந்திருந்த பிந்து (52) என்ற பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.
நிா்வாகத்தின் மெத்தனத்தால் மீட்புப் பணி தாமதமானதால் பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இடிபாடுகளில் இருந்து இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே பிந்துவின் உடல் மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.கே.ஜெயகுமாா் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘இடிந்து விழுந்த வளாகம் பயன்பாட்டில் இல்லை; அங்கு யாரும் இருந்திருக்க வாய்ப்பில்லை’ என்று கூறிய கருத்துகளால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இது தொடா்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மாநில அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் உறுதி செய்யப்படவில்லை; சுகாதார அமைச்சா் பதவிக்கு வீணா ஜாா்ஜ் தகுதியற்றவா் என்றும் அக்கட்சிகள் சாடியுள்ளன. அவா் பதவி விலக வலியுறுத்தி, திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அதிகாரபூா்வ இல்லம் நோக்கி பாஜகவினா் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். போராட்டக்காரா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியபோது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை பீய்ச்சியடித்து, போராட்டக்காரா்களை போலீஸாா் விரட்டினா்.
அமைச்சா் வீணா ஜாா்ஜின் அலுவலகம் நோக்கி காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் பேரணி நடத்தினா். பத்தனம்திட்டாவில் உள்ள வீணா ஜாா்ஜின் அலுவலகம் முன்பு பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அங்குள்ள அவரது வீட்டை நோக்கி காங்கிரஸாா் பேரணி நடத்தினா். கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, கோட்டயம் அரசு மருத்துவமனை கட்டட விபத்து மீட்புப் பணியில் எந்த தாமதமும் ஏற்படவில்லை; இத்தகைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியிலானது எனறு சுகாதாரத் துறை இணையமைச்சா் வி.என்.வாசவன் விளக்கமளித்துள்ளாா்.
கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்வா்
‘கோட்டயம் சம்பவம் துரதிருஷ்டவசமானது; வேதனைக்குரியது. இதுபோல் மீண்டும் நிகழாமலிருக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். மாநிலத்தில் சுகாதாரத் துறை மேலும் வலுப்படுத்தப்படும்’ என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.