கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்கிறீர்களா? சேமிப்பு, முதலீடு, வீடு வாங்குவது... எப்படி திட்டமிடலாம்?
இன்றைய காலக்கட்டத்தில், கணவன், மனைவி இருவரும் சம்பாதிப்பது என்பது மிக மிக சாதாரண விஷயம். 'அப்போ இரட்டை வருமானம் வருதே... சேமிப்பும், முதலீடும் அதிகம் பண்ணலாமே?' என்று பார்த்தால், அது தான் முடிவதில்லை.
கையில் எத்தனை காசு வந்தாலும், அது சட்டென காணாமல் போய்விடுகிறது. அப்படியிருக்கையில், இந்த இரட்டை வருமானத்தில் செலவு செய்வது, சேமிப்பது, முதலீடு செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்... வாங்க...

செலவுகளை நிர்வாகிப்பது எப்படி?
முதலில், இருவரும் சேர்ந்து ஒரு கூட்டுக் கணக்கைத் தொடங்க வேண்டும். இதில் மாதா மாதம் அவரவர் சம்பளத்திற்கு ஏற்ப, அவர்களது பங்குத் தொகையை செலுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு, உங்களது குடும்பத்தின் மாத செலவு தொகை ரூ.50,000... கணவனுக்கு மாத வருமானம் ரூ.60,000... மனைவிக்கு மாத வருமானம் ரூ.40,000... என்று வைத்துகொள்வோம்.
ஆக, இந்தக் கூட்டுக் கணக்கில், கணவன் ரூ.30,000 மற்றும் மனைவி ரூ.20,000 செலுத்தலாம். பின், இந்தக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து செலவுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
சேமிப்பது எப்படி?
மீதம் இருக்கும் தொகையில், இருவரும் ஆறு மாதத்திற்கான செலவு தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக எடுத்துவைத்து விட வேண்டும். இது எதாவது அசம்பாவித சூழலில் பெரிதும் கைக்கொடுக்கும்.

இருவருக்கும் இன்சூரன்ஸ் தேவையா?
இருவரும் சம்பாதிக்கும் வீட்டில், இருவரின் வருமானத்தை நம்பி தான் ஒவ்வொரு செலவுகளும் இருக்கும். அதனால், யார் ஒருவருக்கு என்ன ஆனாலும், குடும்பம் பாதிக்கும்.
அதனால், இருவருக்குமே ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.
ஆயுள் காப்பீடு என்பது அவரவர் ஆண்டு வருமானத்தின் 15 - 20 மடங்கு அதிக தொகை வருவது போல இருக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டை 10 - 15 லட்ச மதிப்பிலான ஃபேமிலி ஃப்ளோட்டர் காப்பீடாக எடுத்துகொள்ளுங்கள்.
முதலீடு எப்படி செய்ய வேண்டும்?
கணவன், மனைவி என இருவரும் ஒரே விஷயத்திற்காக முதலீடு செய்யாமல், இருவரும் தங்களுக்குள் இலக்குகளை பிரித்துகொள்ளலாம்.
உதாரணத்திற்கு, கணவன் இலக்குகளில் ஓய்வுக்கால சேமிப்பு, கார் வாங்குவது போன்றவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.
மனைவி இலக்குகளில் குழந்தைகளின் படிப்பு, டிராவல் போன்றவற்றை வைத்துக்கொள்ளுங்கள்.
ஆக, இதற்கேற்ற மாதிரி முதலீடு செய்யத் தொடங்குங்கள்.
ரிஸ்க் அதிகம் எடுக்கலாம் என்பவர்கள்...
கணவன் பங்குகள், இக்விட்டி ஃபண்டுகளிலும், மனைவி துறை சார்ந்த பங்குகள், ஸ்மால் கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.

மிதமான ரிஸ்க் எடுக்கலாம் என்பவர்கள்...
கணவன் பேலன்ஸ்ட் ஃபண்ட், என்.பி.எஸ்களிலும், மனைவி ELSS, ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
குறைந்த ரிஸ்க் தான் எடுக்க முடியும் என்பவர்கள்...
கணவன் பி.பி.எஃப், ஃபிக்ஸ்ட் டெபாசிட்டிலும், மனைவி ரெக்கரிங் டெபாசிட், டெப்ட் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
வீடு வாங்கலாமா?
தாராளமாக வாங்கலாம். இருவரும் சம்பாதித்து கொண்டிருக்கும்போதே, ஒரு சொந்த வீட்டை வாங்கிவிட்டால், அதிக கடனில் சிக்காமல் தப்பித்து கொள்ளலாம். வீட்டைக் குறிப்பாக சொல்வதற்கு காரணம், அது ஒரு பெரிய சொத்து.
மேலும், 'இருவரும் சம்பாதிக்கும் போது' என்று கூறுவதற்கு காரணம், எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் மாறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால், கைக்கு மீறி, ஆடம்பர சொத்து என்று வாங்கி மாட்டிக்கொள்ளக் கூடாது.
தவிர்க்க வேண்டியது...
'அது தான் ரெண்டு வருமானம் வருதே...' என்று ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள். எதுவாக இருந்தாலும் பிளான் செய்து செய்யுங்கள்.
முதல் முறை முதலீடு செய்பவர்கள், அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதலோடு செய்வது நல்லது.