காங்கிரஸ் வழங்கிய சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம்! இது பிகார் சம்பவம்!
பிகார் மாநிலத்தில் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் காங்கிரஸ் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழங்கிய நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.
பிரியதர்ஷினி உதான் திட்டம் என்ற பெயரில் 5 லட்சம் பெண்களுக்கு இலவசமாக சானிடரி நாப்கின் வழங்கியது காங்கிரஸ். ஆனால், அதில் திட்டத்தின் விளம்பரத்துடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த நாப்கின் அட்டையில், பிகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள பேச்சாளர், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் இடம்பெற்றிருப்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சானிடரி நாப்கின் பெட்டியில் ராகுல் புகைப்படம் ஏன் வந்தது என்பது கேள்வியல்ல, இந்த காலத்திலும் கூட, பெண்கள் மாதவிலக்கின்போது ஏன் நாப்கின் பயன்படுத்தாமல், பழைய துணிகளைப் பயன்படுத்தும் நிலை உள்ளது என்பதே கேள்வி என்று தெரிவித்துள்ளனர்.
சிந்தூர் பெட்டி முதல், தடுப்பூசி சான்றிதழ் வரை மோடியின் புகைப்படத்தைப் போட்டுக் கொள்ளும் பாஜக, தற்போது ராகுல் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பிகிறதா என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.