ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!
ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதிர்த்து வருவதாகவும், ஆனால், தங்களின் எதிர்ப்பு அத்தகையது அல்ல; வரம்புக்குட்பட்டதே எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மராத்தியை தாய்மொழியாகக் கொண்ட மகாராஷ்டிரத்திலுள்ள ஆரம்பப் பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்படுவது குறித்து செய்தியாளர்களுடன் சஞ்சய் ரெளத் பேசியதாவது,
''ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல சிவசேனை (உத்தவ் அணி). ஆரம்பப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்பதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தப் பிரச்னையில் தென்மாநிலங்கள் பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஹிந்தி எதிர்ப்பில் அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், ஹிந்தி பேசமாட்டோம், அல்லது மற்றவர்களையும் பேச விடமாட்டோம் என்பதாகும். ஆனால், மகாராஷ்டிரத்தில் எங்களின் நிலைப்பாடு அத்தகையது அல்ல. நாங்கள் ஹிந்தி பேசுவோம். ஆனால், ஆரம்பப் பள்ளிகளில் அதனை கட்டாயப் பாடமாகப் படிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்கள் நிலைப்பாட்டிற்கு வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார். இதில், இருந்து கற்றுக்கொள்வதாகவும் கூறினார். அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், ஹிந்தி பேசும் யாரையும் நாங்கள் தடுத்து நிறுத்தப்போவதில்லை. ஏனெனில், இங்கு ஹிந்தி படங்கள், ஹிந்தி திரையரங்குகள், ஹிந்தி இசை உள்ளிட்டவை உள்ளன. எங்கள் எதிர்ப்பு தெளிவானது. பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்குவதை ஏற்கமாட்டோம்'' எனக் குறிப்பிட்டார்.
தாக்கரே சகோதரர்கள் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய சஞ்சய் ரெளத், ''ஆம், அரசியல் நலனுக்காக இரு சகோதரர்களும் இணைந்துள்ளனர். ஆனால், ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் செய்யப்போவது என்ன?'' எனக் கேள்வி எழுப்பினார்.
மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கையின்கீழ், மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை நாடெங்கிலும் கொண்டு வருவதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிர எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?
Our fight is only against imposition of Hindi in primary education says Sena UBT MP Sanjay Raut