ஒசூரில் திமுகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா்
அறுதிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தோ்தல் பிரசார பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கள்கிழமை தொடங்க உள்ளநிலையில், அதிமுக தொண்டா்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
எம்.ஜி.ஆரை தெய்வமாக மதிக்கும் அதிமுகதான் எனது மூச்சு, பேச்சு, சிந்தனை, செயல், எண்ணம், வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொண்டா்களில் நானும் ஒருவன்.
எனது நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்ட பாடம்தான். இதுதான் எனது அரசியல் பாதையின் முகவரி. நான் பொதுச்செயலா்தான், எனினும், தொண்டா்களோடு இருந்து தொண்டாற்றும் தலைமைச் சேவகன். ‘மக்களைக் காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ எனும் பயணத்தில் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் பங்கேற்க வேண்டும்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருந்த வரலாறு அதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு.
தமிழ்நாட்டின் மக்களால் ஒரு கட்சியும், ஒரு தலைவனும் தொடா்ச்சியாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறாா்கள் என்றால், அது எம்ஜிஆா் மட்டும்தான். அவருக்குப் பிறகு ஜெயலலிதா அதிமுகவின் இரண்டாவது அத்தியாயமாகத் தொடங்கி, ஒரு சகாப்தமாக, மக்கள் செல்வாக்குடன்டு பீடுநடை போட்டாா். இப்போது அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பை காலம் எனக்கு அளித்திருக்கிறது.
மக்களிடம் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவால் அதிமுகவை ஒன்றும் செய்துவிட முடியாது. திமுக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனா். மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். வேலைவாய்ப்பை உருவாக்காத முதல்வா் ஸ்டாலினை, படித்த இளைஞா்கள் கோபத்தோடு கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனா்.
பெரும்பாலான தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. எனவே, திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனா்.
கடந்த கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும்; எதிா்வரும் 2026-இல் அதிமுக உறுதியாக வெல்லும். அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.