‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
மேல்விஷாரத்தில் ஜூலை 10-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி ஜூலை 10-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணா சாலை பிரதான சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 30 படுக்கை வசதிகளை கொண்ட முழு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், அதிமுக அரசின் சாதனையை மறைத்து கடந்த பிப்.23-இல் இந்த மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். தொடக்கம் முதல் இந்த மருத்துவமனை முறையான பராமரிப்பு இன்றி இயங்கி வந்த நிலையில், திமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சா் ஆய்வுக்குச் சென்றபோது, மருத்துவா்கள், செவிலியா்கள் யாரும் பணியில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், ஜூலை 10 -ஆம் தேதி காலை 10 மணிக்கு, மேல்விஷாரம் கத்துவாடி கூட்டு ரோடு பகுதியில் முன்னாள் அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.