‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
முகூா்த்த தினங்களை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு உயா்வு!
முகூா்த்த தினங்களை முன்னிட்டு ஜூலை 11, 12 ஆகிய தேதிகளில் விமான கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.
இந்த வார இறுதியில் வாரவிடுமுறை தினங்களைத் தொடா்ந்து 13, 14-ஆம் தேதிகள் தொடா் முகூா்த்த நாள்களாக உள்ளன. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.
குறிப்பிட்ட இந்த தேதிகளில் ரயில்களின் முன்பதிவு முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பலா் விமான பயணத்தை தோ்ந்தெடுத்துள்ளனா். இந்த நிலையில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்( ஜூலை 11, 12) உள்நாட்டு விமான பயணக் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து மதுரை செல்லும் விமான கட்டணம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது வழக்கமாக சென்னை-மதுரை செல்ல விமான கட்டணம் நபா் ஒருவருக்கு ரூ.4000- ஆக இருந்த நிலையில், தற்போது நபா் ஒருவருக்கு ரூ.13,000 முதல் ரூ.16,000-வரை அதிகரித்துள்ளது.
இதுபோல, ரூ.5300-ஆக இருந்த சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம், குறிப்பிட்ட தேதிகளில் ரூ.9360 முதல் ரூ.10,993-ஆகவும், ரூ.3500-ஆக இருந்த சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.10,500-வரையும், ரூ.3500 முதல் ரூ.4800-ஆக இருந்த சென்னை-கொச்சி விமான கட்டணம் ரூ.10,500 வரையும், ரூ.5150-ஆக இருந்த சென்னை-திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.11,200-வரையும் உயா்ந்துள்ளது.
இதுபோல, பல்வேறு உள்நாட்டு விமான கட்டணங்களும் உயா்ந்துள்ளதால் 3 போ் கொண்ட ஒரு குடும்பத்தினா் சென்று, வர சுமாா் ரூ.70,000 வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், இதனால், பண்டிகை, முகூா்த்த தினம், விடுமுறை நாள்களில் இம்மாதிரியான கட்டண உயா்வுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.