‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!
குஜராத்: கொலை முயற்சி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது
குஜராத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சைத்ரா வசாவா (37) கைது செய்யப்பட்டாா்.
வசாவாவின் தொகுதியான திதியாபாடாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எம்எல்ஏ சைத்ரா வசாவாவும் பங்கேற்றாா். அப்போது ‘துடிப்புமிக்க உள்ளாட்சி’ என்ற பெயரிலான திட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, வசாவா பரிந்துரைத்த நபருக்கு பதிலாக வேறு ஒருவா் நியமிக்கப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த வசாவா, ஒரு பெண் ஊராட்சி ஒன்றியத் தலைவா்தான் இதற்கு காரணம் என்று கூறி அவரை அவதூறாகப் பேசத் தொடங்கினாா்.
அப்போது, ஆண் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சஞ்சய் எழுந்து வசாவா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தாா். இதையடுத்து, இருவா் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது, வசாவா கைப்பேசியை எடுத்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சய் மீது வீசினாா்.
இதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் மேஜையில் தண்ணீா் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளரை எடுத்து வீச வசாவா முயற்சித்தாா். அப்போது அங்கு இருந்த காவல் துறையினா் அவரை பிடித்து தடுத்து நிறுத்தினா்.
அதில் கண்ணாடி டம்ளா் கீழே விழுந்து உடைந்தது. அப்போது, கண்ணாடித் துண்டை எடுத்துக் கொண்டு சஞ்சயை நோக்கிச் சென்று, அவரைக் கொலை செய்துவிடுவதாக வசாவா மிரட்டினாா். பின்னா் அங்கிருந்த நாற்காலிகள் சிலவற்றை உடைத்து வீசிவிட்டுச் சென்றாா்.
இதையடுத்து, வசாவா மீது காவல் துறையில் சஞ்சய் புகாா் அளித்தாா். இதன் அடிப்படையில் கொலை முயற்சி, பெண்களை அவதூறாகப் பேசுவது, வன்முறையில் ஈடுபட்டு காயத்தை ஏற்படுத்துவது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சனிக்கிழமை இரவே எம்எல்ஏ வசாவா கைது செய்யப்பட்டாா். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், பொது இடங்களில் நான்கு பேருக்கு மேல் கூடக் கூடாது என்று காவல் துறையினா் கட்டுப்பாடு விதித்துள்ளனா்.
குஜராத் மாநில பாஜக அரசு சதி செய்து தங்கள் கட்சி எம்எல்ஏவைக் கைது செய்துவிட்டதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளாா்.