6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து; வெற்றியை நோக்கி முன்னேறும் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு இந்தியா 608 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
608 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்று (ஜூலை 5) நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்திருந்தது. ஆலி போப் 24 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வெற்றியை நோக்கி முன்னேறும் இந்தியா
கடைசி நாளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 536 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு 7 விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் மழையால் தாமதம் ஆனது.
மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்டு இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின்போது, 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து அணியின் ஆலி போப் மற்றும் ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ் தீப். ஆலி போப் 24 ரன்களும், ஹாரி ப்ரூக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை வாஷிங்டன் சுந்தர் உடைத்தார். வாஷிங்டர் சுந்தரின் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜேமி ஸ்மித் 32 ரன்களுடன் களத்தில் உள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 455 ரன்கள் தேவைப்படுகின்றன. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.
கடைசி நாள் ஆட்டம் நிறைவடைய இன்னும் 55 ஓவர்கள் மீதமிருக்க, இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The Indian team is moving towards victory in the second Test match against England.
இதையும் படிக்க: அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்: வைபவ் சூர்யவன்ஷி