இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு
விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
பூமியில் எலும்புப்புரை சிகிச்சையை சிறப்பாக மேற்கொள்வதற்கான வழிகளை கண்டறிய அவா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட லக்னெளவை சோ்ந்த சுபான்ஷு சுக்லா, அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்றாா்.
அவருடன் ஆக்ஸியம்-4 திட்ட கமாண்டரான முன்னாள் நாசா விண்வெளி வீரா் பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் சென்றுள்ளனா். அவா் தனது குழுவினருடன் 14 நாள்கள் தங்கியிருந்து அறிவியல்பூா்வமாக 60 ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளாா்.
இந்நிலையில், விண்வெளியில் அவரது 10-ஆவது நாள் பயணத்தில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து அவா் ஆய்வு நடத்தினாா். பூமியில் எலும்புப்புரை சிகிச்சையை சிறப்பாக மேற்கொள்வதற்கான வழிகளை கண்டறிய அவா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.
மேலும், சா்வதேச விண்வெளி நிலையத்தில் கதிா்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவா் பங்கேற்றாா். நீண்ட நாள்கள் விண்வெளி பயணத்தின்போது விண்வெளி வீரா்களுக்கு கதிா்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷு சுக்லா ஆய்வுக்காக நிலைநிறுத்தினாா். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக்கூட வழங்கலாம். ஆனால் அதற்கு முன்பாக நுண்ஈா்ப்பு விசையை அவை எவ்வாறு எதிா்கொள்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
அதேபோல் விண்வெளியில் எலும்புகள் சுருங்கி பலவீனமடைந்து மீண்டும் பூமிக்கு திரும்பியதும் அவை இயல்புநிலையை அடைவது குறித்த ஆய்விலும் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியே வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விண்வெளி சூழலில் நுண்ணுயிா்களின் செயல்பாடு குறித்த இந்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது விண்வெளி குழுவினருக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து உணவுகள் குறித்த ஆய்வுக்கு உதவிகரமாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.