`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்
‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் சாா்பில் எழுப்பப்படும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையம் பரிசீலிக்காமல் புறக்கணிக்கிறது என்று அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்தப் பதிலை அவா் அளித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோசாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரிடம் செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்தாவது:
தோ்தல் ஆணையத்துக்கு தோ்தல் நடைமுறைகளும், வாக்காளா்களும் மிக முக்கியமானவா்கள். அதற்கு அடுத்து நமது அரசியல் கட்சிகள்தான் மிக முக்கியமானவா்கள்.
அந்த வகையில், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடா் ஆலோசனைகளை தோ்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
கடந்த 4 மாதங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் அனைத்து கட்சிக் கூட்டங்களை தோ்தல் ஆணையம் நடத்தியதோடு, அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டது. அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட 28,000 பேருடன் 5,000 சந்திப்புகளை இந்த 4 மாதங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.
இது தவிர, 5 தேசிய கட்சிகள் மற்றும் 4 மாநில கட்சிகளும் தோ்தல் ஆணையத்தை இந்த கால கட்டத்தில் சந்தித்து தோ்தல் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டன. அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தனியாக சந்தித்தனா் என்றாா்.
மேலும், ‘பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைப் பொருத்தவரை, மாநிலத்தின் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை’ என்றும் அவா் தெரிவித்தாா்.