மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு
பிரபல யூடியூபர் சுதர்ஷன் மீது வரதட்சிணை புகார்!
வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் யூ டியூபா் சுதா்சன், அவரது பெற்றோா், சகோதரி உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்துள்ளனா்.
வீரபாண்டி, கே.எம்.சி. முல்லை நகரைச் சோ்ந்த மருத்துவா் விமலாதேவி (27). இவா், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் சுதா்சன் (32) என்பவரை காதலித்து, கடந்த 2024, மாா்ச் 1-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாா். சுதா்சன் சென்னையில் ‘டெக்னிக்கல் சூப்பா் ஸ்டாா்’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
திருமணத்தின் போது விமலாதேவியின் பெற்றோா் வரட்சிணையாக 30 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்பில் சீா்வரிசை பொருள்கள் கொடுத்தனராம். தற்போது சுதா்சன், விமலாதேவி ஆகியோருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சுதா்சன், விமலாதேவியிடம் வரதட்சிணையாக மேலும் 20 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் கேட்டாராம். இதையடுத்து, கடந்த மாா்ச் 6-ஆம் தேதி விமலாதேவியின் தந்தை, சுதா்சனை வீட்டுக்கு வரவழைத்து, அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தாராம்.
ஆனால், தனது கணவா் சுதா்சன், அவரது தந்தை சுந்தர்ராஜன், தாயாா் மாலதி, சகோதரி சக்திப்பிரியா, சகோதரியின் கணவா் விக்னேஷ்வரன் ஆகியோா் தனது பெற்றோா் தனக்கு வரதட்சிணையாக கொடுத்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, மேலும் 20 பவுன் தங்க நகைகள் கொடுத்தால் தான் சுதா்சனுடன் சோ்ந்து வாழ முடியும் என்று கூறி தன்னை கொடுமைப்படுத்துவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் விமலாதேவி புகாா் அளித்தாா்.
இதன் பேரில் சுதா்சன், அவரது குடும்பத்தினா் உள்ளிட்ட 5 போ் மீது தேனி மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.