குடியிருப்புப் பகுதிக்குள் சுற்றித் திரியும் காட்டுயானை படையப்பா! பொதுமக்கள் அச்சம்!
கேரள மாநிலம், மூணாறில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிவதால் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கேரள மாநிலம், மூணாறு பகுதியில் காட்டுயானை படையப்பா சுற்றித் திரிகிறது. குண்டலை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்களுக்குள் சுற்றித் திரிந்த அந்த யானை தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வரத் தொடங்கியுள்ளது. கடந்த 20 நாள்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் யானை சுற்றித் திரிவதால் தோட்டத் தொழிலாளா்கள், பொதுமக்கள் அச்சத்துடனேயே வெளியில் சென்று வருகின்றனா்.
யானையின் நடமாட்டத்தை கேரள வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து சமூக வலைதள குழுக்களில் பதிவிட்டு வருகின்றனா். வெள்ளிக்கிழமை இரவு மாட்டுப்பட்டி பகுதியில் நீண்ட நேரம் யானை முகாமிட்டிருந்ததால் வாகனங்கள் அந்தப் பகுதி வழியாக செல்ல முடியவில்லை.
இதையடுத்து, வனத்துறையினா் சப்தமிட்டு காட்டுப்பகுதிக்குள் யானையை விரட்டினா். படையப்பா காட்டுயானை இதுவரை யாரையும் தாக்கவில்லை என்றாலும் தொழிலாளா்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது.