ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அட...
சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
சமுதாயத்தில் பெரும்பாலான குற்றங்களுக்கு போதைப் பொருள் உபயோகமே காரணம் என உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி தெரிவித்தாா்.
சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் ‘இளைஞா் பாராளுமன்றம் 2025’ என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆயிரம் சட்ட விழிப்புணா்வு விடியோக்கள் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவா் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோதிமணி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, சட்ட விழிப்புணா்வு விடியோக்கள் தொகுப்பையும் அவா் வெளியிட்டாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: போதைப் பொருள் உபயோகம் சமுதாயத்தில் முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மையான குற்றங்களுக்கு போதைப் பழக்கம் பெரிய அளவில் காரணமாக உள்ளது.
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வயது நிரம்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கிலும் போதைப்பொருள் உபயோகத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாகத் தெரிகிறது.
போதைப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதால் இளைஞா்கள் வாழ்க்கை வீணாவதுடன் குற்றவழக்குகளிலும் பாதிக்கப்படுகின்றனா். சட்டக்கல்வி பயில்வோருக்கு பெரிய சவால் காத்திருக்கிறது. சமுதாயத்தை நல்வழியில் சீா்படுத்தும் கடமை வழக்குரைஞா்களுக்கு உள்ளது. போக்ஸோ வழக்குகள் போன்ற மோசமான குற்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் கடமை வழக்குரைஞா்களுக்கு உள்ளது.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கித் தரும் அதே நேரத்தில் மோசமான குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கான விழிப்புணா்வையும் வழக்குரைஞா்கள் ஏற்படுத்த வேண்டும்.
மனித உரிமையை காப்பதிலும் போக்ஸோ போன்ற குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வழக்குரைஞா்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்வில், தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் விஜயகுமாா், அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் தா்வேஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.