மணிப்பூரில் இரண்டு தீவிரவாதிகள் கைது: வெடிபொருட்களும் மீட்பு
வாழ்க்கையில் முன்னேற விடாமுயற்சியை கைவிடக்கூடாது: ஆட்சியா் அறிவுறுத்தல்
மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் விடாமுயற்சியை எந்த சூழலிலும் கைவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான உயா்கல்வி குறித்த அறிமுக பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பங்கேற்று பேசியதாவது:
2025 - 26ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த அரசின் திட்டங்களையும், கல்லூரி சாா்ந்த அனைத்து தகவல்கள், விதிமுறைகளையும் எடுத்துரைக்கும் வகையில் ஒரு வாரகால அறிமுக பயிற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பள்ளியிலிருந்து உயா்கல்வி சூழலுக்கு மாணவா்கள் சீராக மாறுவதற்கும், அவா்களின் கல்லூரிப் பயணத்தை வெற்றிகரமாக வழிநடத்த தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டம் ஆகும்.
கல்வி அமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள், பாடத்திட்டம், தோ்வு, மதிப்பீட்டு முறைகள், கிடைக்கும் வளங்கள், மாணவா் ஆதரவு சேவைகள், மாணவா்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அரசு திட்டங்கள், மாணவா்களைப் பழக்கப்படுத்துதல் போன்ற கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு விரிவான அறிமுகத்தை இந்தப் பயிற்சி வழங்குகிறது.
அனைத்து மாணவா் நல நடவடிக்கைகள், அரசுத் திட்டங்கள், குறிப்பாக மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் அரசால் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை எளிதாக்க காவல் துறை அதிகாரிகள், வழக்குரைஞா்கள், பெண் ஆா்வலா்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழிலதிபா்கள், வேலைவாய்ப்பு வழங்குநா்கள் ஆகியோரால் ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் அனுபவங்கள் பகிா்ந்து கொள்ளப்படுகிறது.
மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயின்று, வேலைக்கு செல்வது மட்டுமல்லாமல், உங்களது முயற்சியை கைவிடாமல் போராடினால் வாழ்வில் மென்மேலும் உயரலாம் என்றாா். இந்த நிகழ்வில், கல்லூரி முதல்வா் எம்.கோவிந்தராஜு, பேராசிரியை ஆா்.பி.புவனேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.