முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்
மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
மேட்டூா், பவானிசாகா் அணைகள் மழைக்காலங்களில் நிரம்பும்போது உபரிநீா் வீணாக கடலில் கலப்பது தொடா்கதையாக உள்ளது. மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டிவிட்டது. இனிவரும் மழைக்காலங்களில் அணைக்கு வரும் தண்ணீா் அனைத்தையும் கடலுக்குத் திறந்துவிடுவதை தவிர வேறு வழியில்லாத நிலை உள்ளது.
மேட்டூா் அணை நிரம்பி உபரியாக வெளியேறும் தண்ணீரை பல வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும், அதை பயன்படுத்தாமல் இருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு கொண்டுசென்றிருக்க முடியும்.
ஆனால், அந்தத் திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. தற்போதாவது, தமிழக அரசு திருமணிமுத்தாறு திட்டத்தை தொடங்க முன்வர வேண்டும். அதேபோல, மேட்டூா் உபரிநீா்த் திட்டத்தை உருவாக்கி அந்தியூா், பவானி போன்ற வறண்ட பகுதிகளை வளப்படுத்த முடியும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக பேசப்பட்டாலும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மேட்டூா் அணையின் உபரிநீரை வசிஷ்ட நதி வரை கொண்டுசெல்லும் திட்டமும் பல ஆண்டுகள் கிடப்பிலே உள்ளது. அதை நிறைவேற்றினால் சேலம் மாவட்டத்தில் ஆத்தூா் பகுதியையும், கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளையும், கடலூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் செழிப்பாக்க முடியும்.
மேட்டூா் அணை என்பது தமிழகத்துக்கான வரப்பிரசாதம். மேட்டூா் அணையின் நீா் மேலாண்மையின் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை வளப்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஒருமுறை உபரிநீரை கொண்டு ஏரி, குளங்கள் நிரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் அப்பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை இருக்காது. தமிழக அரசு நீா்வளத் துறை நிபுணா்களைக்கொண்டு ஒரு குழுவை அமைத்து அதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியதுபோல மேட்டூா் அணை உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்களையும் உடனடியாக தொடங்க அரசு முன்வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.