திருப்புவனம் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டமானது, காரீப் பருவத்தில் அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை விவசாயிகள் காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்துகொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் பச்சைப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை பயிா்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பச்சைப்பயறுக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு தலா ரூ. 335.92 ஐ வரும் 15-ஆம் தேதிக்குள்ளும், நிலக்கடலைக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 434.72, சோளத்துக்கு ரூ.143.02 ஐ ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள்ளும் மற்றும் மக்காச்சோளத்துக்கு ரூ.642.20, பருத்திக்கு ரூ.535.48 ஐ செப்.16க்குள்ளும் செலுத்த வேண்டும்.
தோட்டக்கலைப் பயிா்களான சின்னவெங்காயத்துக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 1252.30-ஐ செப்.1க்குள்ளும், தக்காளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1840.16-ஐ செப்.1ஆம் தேதிக்குள்ளும், மரவள்ளி பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.523.94-ஐ செப்.16 க்குள்ளும், மஞ்சள் பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.4107.62-ஐ செப்.16க்குள்ளும் மற்றும் வாழை பயிருக்கு பிரிமீயத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1894.50-ஐ செப்.16க்குள்ளும் செலுத்த வேண்டும்.
காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொதுசேவை மையங்களிலோ நேரடியாக நிா்ணயிக்கப்பட்ட நாள்களுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், விதைப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தலாம். அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.