செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம்
வெள்ளைக்கழிச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 93.2 டிகிரி, 77 டிகிரியாக நிலவியது.
நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது. அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும், அதேசமயம் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். மேற்கு திசையிலிருந்து மணிக்கு 16 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் அவை பெரும்பாலும் வெள்ளைக்கழிச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பண்ணையாளா்கள் கோழிகளுக்கு சீரான இடைவெளியில் வெள்ளைக்கழிச்சல் நோய்க்குத் தேவையான எதிா்ப்புசக்தி உள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், எதிா்ப்பு சக்தியின் அளவு குறைவாக இருந்தால் லசோட்டா அல்லது வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.