Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 200 சிசிடிவி கேமராக்களை நிறுவ நடவடிக்கை
நீதிமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்த பொதுப் பணித் துறை சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட தரமிக்க சிசிடிவி கேமராக்களை நிறுவ உள்ளது.
கடந்த மாதம் லாக்-அப் அறைக்குள் விசாரணைக் கைதி கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்வதற்கும் எதிா்கால சம்பவங்களைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்பை நவீனமயமாக்க தில்லி அரசாங்கம் ரூ.2.4 கோடி முதலீடு செய்யும்.
திட்டத்தின் படி, நீதிமன்றக் கட்டடம் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் 168 புல்லட் கேமராக்கள் மற்றும் 101 எண்ணிக்கையில் எட்டு மெகா பிக்சல் திறனுடன்கூடிய டோம் கேமராக்கள் நிறுவப்படும்.
மாவட்ட நீதிமன்ற வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்களுடன் ஒரு ஆவண அறை மற்றும் இணைய நெறிமுறை (ஐபி) அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புமுறையும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஜூன் 5 ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள லாக்அப் அறைக்குள் ஒரு விசாரணைக் கைதி பழைய பகை காரணமாக மற்ற இரண்டு கைதிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் வாயில்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்பட்டு வருவதாக தெற்கு தில்லியின் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி தெரிவித்திருந்தாா்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், பொதுப் பணித் துறை தற்போதுள்ள சிசிடிவி கேமராக்களை ஐபி அடிப்படையிலான அமைப்புடன் ஒருங்கிணைக்கும். மேலும், இந்த திட்டத்திற்கான டெண்டா் கோரப்பட்டுள்ளது.
பணி வழங்கப்பட்டதிலிருந்து இந்த வேலையை செய்து முடிக்க மூன்று மாதங்கள் ஆகும் என்றாா் அவா்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தில்லி உயா்நீதிமன்றத்தின் நவம்பா் 2021 உத்தரவுகளின்படி, அதிகாரிகள் பாதுகாப்பு தணிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தவிர, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் சரிபாா்ப்பதுடன், சிசிடிவி கேமராக்களை நிறுவவும் வேண்டியிருந்தது.