Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
தில்லி அரசின் கோரிக்கைக்குப் பிறகும் 6 வாகனங்கள் எம்சிடி மூலம் பறிமுதல்
நமது நிருபா்
தில்லி மாநகராட்சி (எம்சிடி) வெள்ளிக்கிழமை ஆறு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ததாகவும், ஜூலை 1- ஆம் தேதி தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 93- ஆக உயா்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி அரசு மத்திய அரசின் காற்றுத் தரக் குழுவிடம் அதிக வயதுடைய வாகனங்கள் மீதான எரிபொருள் தடையை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு வியாழக்கிழமை கோரியிருந்த நிலையில், இந்த வாகனப் பறிமுதல் நடந்தது. வியாழக்கிழமை எந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை.
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (சிஏக்யூஎம்) உத்தரவுகளைத் தொடா்ந்து, தில்லி முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகள் செவ்வாய்க்கிழமை முதல் பயன்படுத்தத் தகுதியில்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கண்டிப்பான இணக்கத்தை உறுதி செய்வதற்காக போக்குவரத்துத் துறையும் தில்லி காவல்துறை மற்றும் போக்குவரத்து ஊழியா்களுடன் இணைந்து விரிவான அமலாக்க உத்தியை செயல்படுத்தியுள்ளது.
எனினும், தடையின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை தில்லி அரசு மத்திய அரசின் காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திற்கு இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி கடிதம் எழுதியது.
இது தொடா்பாக தில்லி அரசு எழுதிய கடிதத்தில், எரிபொருள் தடை சாத்தியமில்லை என்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக செயல்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தது.
2018-ஆம் ஆண்டைய உச்சநீதிமன்றத் தீா்ப்பானது தில்லியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களையும் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களையும் இயக்கத் தடை செய்கிறது.
மேலும், 2014-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவானது, 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை பொது இடங்களில் நிறுத்துவதைத் தடை செய்கிறது.