தேனீயை விழுங்கினால் மாரடைப்பு ஏற்படுமா? - மருத்துவர் சொல்வதென்ன?
பிரபல பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர். பிரபல தொழிலதிபரான இவர் சில வாரங்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற போலோ விளையாட்டுப்போட்டியின்போது எதிர்பாராதவிதமாக தேனீ ஒன்றை விழுங்கியுள்ளார். அது அவருடைய இதயத்தை பாதித்து திடீர் நெஞ்சுவலி ஏற்படுத்தவே, அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இதய நிபுணர் கோவிணி பாலசுப்பிரமணி அவர்களிடத்தில் கேட்டபோது, ''தற்போது திடீரென ஏற்படுகிற நெஞ்சுவலி உயிரே போகும் அளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதற்கு உணவு பழக்கவழக்கம், சர்க்கரை நோய், வாழ்க்கை முறையில் மாறுபாடு ஆகியவையே முதன்மை காரணமாக விளங்குகிறது.
இவருடைய விஷயத்தில், தேனீயை விழுங்கியதும் அது ஒருவகை வேதிப்பொருளை வெளியிட்டிருக்கும். இதனால், ரத்த நாளங்களை சுருங்கி உடலுக்குப்போகும் ரத்தத்தின் அளவும் ஆக்சிஜன் அளவும் குறைந்திருக்கும். விளைவு, கடும் நெஞ்சுவலி அல்லது கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டிருக்கும். இதயத்திற்கு போக வேண்டிய ரத்தத்தின் அளவு 50% குறைந்தாலே கடும் நெஞ்சுவலி ஏற்படும். அதுவே 90 % குறைந்திருந்தால், இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவு குறைந்து திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் பிரியக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது இதயம் தொடர்பான பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம். இதில் முதன்மையான பரிசோதனையான இசிஜி-யில் ஏதேனும் வேறுபாடுகள் தென்பட்டால் ட்ரெட்மில் பரிசோதனையை செய்ய வேண்டும். இசிஜி- யில், 50 சதவீதம் இதய அடைப்பு ஏற்பட்டால் மட்டுமே மாற்றங்கள் தென்படக்கூடும். அதனால், வயதானவர்கள் மட்டுமல்ல சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள், உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் நிச்சயம் வருடத்துக்கு ஒருமுறை தங்கள் இதய ஆரோக்கியத்தை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்'' என்கிறார் டாக்டர் கோவிணி பாலசுப்பிரமணி.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR