பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
சிவகங்கை: சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பைக்கில் சென்ற இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையை அருகே தமராக்கி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் மனோஜ் பிரபு(29). இவரது குடும்பம் தற்போது சிவகங்கை காமராஜர் காலனியில் வசித்து வருகிறது. வெளிநாட்டில் பணிபுரிந்த மனோஜ்பிரபு விடுமுறையில் அண்மையில் சொந்த ஊர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர் தனது நண்பர்கள் ஹரிகரன், அஜித்குமார் ஆகியோருடன் அருகில் உள்ள இடையமேலூர் கிராமத்தில் திருவிழாவௌயொட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் சக்கந்திக்கு திரும்பினர். புதுப்பட்டி அருகே வரும்போது காரில் வந்த மர்ம கும்பல் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அனைவரும் காயமடைந்தனர். இதில், தப்பியோட முயன்ற மனோஜ் பிரபுவை மட்டும் காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம கும்பல் விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பிச் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இருவர் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த சிவகங்கை நகர் போலீஸார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்து கிடந்த மனோஜ் பிரபுவின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மனோஜ்பிரவின் தங்கை புவனேஸ்வரியை தமராக்கியைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் அபிமன்யூ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தனராம். இதனிடையே புவனேஸ்வரியின் தந்தை செல்லச்சாமி தனது சொந்தத்தில் வேறு ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அபிமன்யூ தான் காதலித்தபோது புவனேஸ்வரியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், விடியோக்களை வெளியிட்டார். இதன் காரணமாக புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து புவனேஸ்வரியின் தந்தை செல்லச்சாமி அபிமன்யூவின் தந்தை பாண்டியை தாக்கியது தொடர்பாக சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2022 இல் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து செல்லச்சாமி தனது ஊரைக்காலி செய்துவிட்டு சிவகங்கை அருகே காமராஜர் காலனி மலர் நகருக்கு குடி பெயர்ந்தார். தொடர்பாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இதனிடையே, வெளிநாட்டில் இருந்து வந்த மனோஜ்பிரபு ஏற்கெனவே நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகததால் அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பிணையில் இருந்து வந்தார்,
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் நண்பர்களுடன் வந்த மனோஜ்பிரபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையில் ஈடுபட்ட அபிமன்யூ, பின்னணியில் இருந்ததாக தமராக்கியைச் சேர்ந்த பாண்டி மனைவி பூச்சிப்பிள்ளை, முருகன், மணி, முனீஸ்வரன் உள்பட 5 பேரை சிவகங்கை நகர் போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அபிமன்யூ உடன் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.