பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!
``அரசுப் பணிகளில் திமுக ஐ.டி விங் நபர்களைச் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முயற்சி'' - இபிஎஸ் கண்டனம்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தி.மு.க ஐ.டி விங் சேர்ந்தவர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் மாடல் அரசு, தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) பணியாளர்களைத் தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன.

இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஆள் சேர்ப்புக்கான விதிகளைத் தளர்த்துவது, தகுதியானவர்களைப் புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து தகவல் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் தகவல் (ம) மக்கள் தொடர்பு இயக்குநருக்கு விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
மருத்துவராக இருக்க மருத்துவப் படிப்பும், வழக்கறிஞராக இருக்க சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலும் பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 4, 2025
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள் pic.twitter.com/agXPjHZt9M
இச்சூழ்நிலையில், தி.மு.க அரசு இந்த அடிப்படைத் தகுதிகளைப் புறக்கணித்து, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, ஜாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு (Quota) விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரிய வருகிறது.
மேலும், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது.
பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்; 2022-ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களைத் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.