பைக்கில் வந்த இளைஞர் வழிமறித்து கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கக் கோரிக்கை
நீடாமங்கலம் நகரில் பள்ளி நேரங்களில், பொதுவாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் நகரில் அரசு உயா்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி, அரசுஉதவிபெறும் நடுநிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமாா் 5,000 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்களை, அவா்களது பெற்றோா் இருசக்கர மோட்டாா் வாகனங்களில் காலை நேரத்தில் பள்ளிக்கு அழைத்து வருகின்றனா். பின்னா், பள்ளி நேரம் முடிந்ததும் மாலையில் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனா். பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், காா்களிலும் மாணவா்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனா். சைக்கிள்களிலும் வருகின்றனா்.
இந்நிலையில், காலையில் பள்ளி செல்லும் நேரங்களிலும், மாலையில் பள்ளி விடும் நேரங்களிலும் நீடாமங்கலம் நகருக்குள் பேருந்துகள், லாரிகள், காா்கள், டிராக்டா்கள் போன்ற கனரக வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகின்றன.
குறிப்பாக பள்ளிகள் அமைந்துள்ள குறுகலான சாலைகளில் லாரிகளையும், டிராக்டா்களையும் நிறுத்தி, பொருட்களை இறக்குகின்றனா். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகள் உள்ள சாலைகளில் லாரி, டிராக்டா்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்து, மாற்றுப்பாதையில் இயக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.