கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!
காங்கிரஸில் சித்தராமையா சிக்கல்!
'கர்நாடக அரசியலில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புரட்சி வெடிக்கும்' என்று சித்தராமையாவின் தீவிர ஆதரவு அமைச்சரான கே.என்.ராஜண்ணா கூறியதும், அந்த மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதை தொடர்ந்து, "முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றப்படுகிறார்' என்று செய்தி பரவியவுடன் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கும் காலம் கனிந்து வருவதாக அவரது ஆதரவாளர்களும், அவர் சார்ந்திருக்கும் ஒக்கலிகர் சமுதாயத்தினரும் கருதினர்.
கட்சியின் மேலிடப் பார்வையாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, மூன்று நாட்கள் முகாமிட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசியது தொண்டர்களை உற்சாகம் கொள்ளச் செய்தது. கடைசியில், முதல்வர் பதவி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் விளக்கம் அளித்தார்.
ஆனாலும், முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் காங்கிரஸ் கட்சிக்குள் மட்டுமின்றி பாஜக, மஜத கட்சிகளில்கூட இன்னும் ஓயவில்லை.
மாற்றம் எளிதல்ல: கர்நாடக அரசியலில் சித்தராமையா, 2023-இல் போட்டிக்கு நின்ற டி.கே.சிவகுமாரை பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதல்வரானவர். அதற்கு காரணம்: அவர் சார்ந்திருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மட்டுமல்லாது, லிங்காயத்து, ஒக்கலிகர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மை சமுதாய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அவர் பெற்றிருப்பதுதான்.
தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோர் சமுதாய ஆதரவைப் பெற 'ஜாதிவாரி கணக்கெடுப்பு' உள்ளிட்ட பிரச்னைகளை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ், அதற்காகவே சித்தராமையாவை முதல்வராகத் தொடரச் செய்கிறது.
ஒருவேளை முதல்வர் பதவியில் இருந்து அவரை நீக்கிவிட்டால், வரும் பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பிற்படுத்தப்பட்டோரின் எதிரி காங்கிரஸ் என்பது போல பாஜக சித்தரிக்க முயலும். அது தேர்தல் களத்தின் போக்கை மாற்றக் கூடும் என காங்கிரஸ் பயப்படுகிறது.
2028-இல் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவில் இருக்கும் காங்கிரஸ், சித்தராமையாவை நீக்கிவிட்டு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவது அவ்வளவு எளிதானதல்ல.
சித்தராமையாவை மாற்றுவது, தேன்கூட்டில் கல்லெறிவதற்கு சமம் என்பதை காங்கிரஸ் புரிந்து வைத்துள்ளது. அதனால்தான், துணை முதல்வர், கட்சியின் மாநிலத்தலைவர், நீர்வளம் மற்றும் பெங்களூரு வளர்ச்சித் துறைகளை டி.கே.சிவகுமார் கையில் நிரப்பி, அவரை அந்தப் பணிகளிலேயே மும்முரமாக்கியுள்ளது.
டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை கொடுக்காவிட்டால், அவர் காங்கிரஸ் மேலிடத்திற்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்.
ஆனால், சித்தராமையா அப்படியல்ல. பதவிக்காக ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டார் என்கின்றன காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள்.
கடந்தகால தவறுகள்: தேசிய அளவில் கர்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. சித்தராமையாவை நீக்குவதன் மூலம் ஆட்சிக்கவிழ்ப்புக்கு தாங்களே காரணமாகி விடக் கூடாது என்று கட்சிமேலிடம் கருதுகிறது.
2023-இல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக மாற்றுத் தலைமையை உருவாக்க பாஜக, மக்கள் செல்வாக்கு மிக்க எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது. அவர் சார்ந்திருந்த லிங்காயத்து சமுதாயத்தின் பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியபோதும், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.
அதேபோல, சித்தராமையாவை நீக்கி 2028 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகத்தை இழக்க காங்கிரஸ் தயாராக இல்லை.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் - ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தானில் அசோக் கெலாட்- சச்சின் பைலட், சத்தீஸ்கரில் பூபேஷ் பகேல் - டி.எஸ்.சிங் தேவ் ஆகியோருக்கு இடையே நிலவிய முதல்வர் போட்டியால், அந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியை காங்கிரஸ் இழந்தது இங்கே நினைவில் கொள்ளத் தக்கது.
தீராத சிக்கல்: பணப்பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிபிஐ, அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் டி.கே.சிவகுமார் சிக்கியிருக்கிறார். வழக்குகள் தீராத நிலையில் டி.கே.சிவகுமாரை முதல்வராக்கினால், தில்லியில் அரவிந்த் கேஜரிவால் முதல்வராக இருந்தபோது கைதாகி சிறைக்குச் சென்ற நிலை அவருக்கும் ஏற்பட்டால் அது கட்சிக்கு சிக்கலாகும் என்பதை காங்கிரஸ் அறிந்துள்ளது.
இந்தப் பின்னணியில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் - சுர்ஜேவாலா சந்திப்புக்குப் பிறகு கிடைத்த துணிவினால்தான் "முழு பதவிக் காலத்துக்கும் நானே முதல்வர். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?' என சித்தராமையா கேட்டுள்ளார்.
அந்தக் கேள்வியில் காங்கிரஸ், மேலிடத்திற்கு மட்டுமல்ல, டி.கே.சிவகுமாருக்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.