செய்திகள் :

சொல்லப் போனால்... ஆதார், வெறும் அட்டைதானா?

post image

‘ஆதார் அட்டையா? அதெல்லாம் செல்லாது, செல்லாது!’ என்று வெண்ணிலா கபடிக் குழு பரோட்டா சூரி தொனியில் மறுத்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய நிலைப்பாட்டால் அதிர்ந்துபோயிருக்கிறார்கள் மக்கள்.

இந்த ஆண்டு இறுதி மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள பிகார் மாநிலத்தில் திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தப் பணியைத் தொடங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

பிகார் மாநில வாக்காளர் பட்டியலில் குடியுரிமை அல்லாதோர் அதிகளவில் இடம் பெற்றிருப்பதாகத் தேர்தல் ஆணையம் கருதுவதே இந்தச் சிறப்புத் திருத்தத்திற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது (இதுவும் ஆணையில் இல்லை; நீதிமன்ற வாதத்தில்தான் தெரிவிக்கப்பட்டது).

2003 ஜன. 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் எந்தச் சான்று ஆவணங்களும் தர வேண்டாம்;  இந்தப் பட்டியலில் (அதாவது, 22 ஆண்டுகளுக்கு முந்தைய!) இடம் பெறாத வாக்காளர்கள் அனைவரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கப் பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு போன்ற ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது ஆணையம்.

என்ன பெரிய அதிர்ச்சி என்றால், ஏற்கெனவே, இந்தத் தேர்தல் ஆணையமே வழங்கியுள்ள வாக்காளர் அடையாள அட்டை, டிஜிட்டல் இந்தியாவின் ஆதார ஆவணமாக முன்னிறுத்தப்படும் ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத்திட்ட அடையாள அட்டை, ‘நம்ம’ குடும்ப அட்டை போன்றவற்றை எல்லாமும் சான்றாவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடுதான்.

கை விரல் ரேகைகள் பதித்து, கருவிழிப் பதிவுகள் எல்லாம் படம் பிடித்து ‘அனைத்து வகையான தொழில்நுட்பங்களுடன்’ உருவாக்கப்பட்டு, தனித்துவ அடையாள எண்ணுடன் முகவரியும் சேர்த்துப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆதார் அட்டையைச் சான்று ஆவணம் அல்ல என்று அறிவித்ததுதான் ஹைலைட்!

இந்தச் சிறப்பு முனைப்புத் திருத்தம் காரணமாக பிகார் மாநிலத்தில் பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்துவிடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவிலும் தேர்தல் முடிவுகளிலும் இந்த திருத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

பிகார் மாநிலத்திலிருந்து மட்டும் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வரையிலும் பிழைப்புத் தேடி நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் (தில்லியில் தொடங்கித் தமிழ்நாடு வரையிலும்) சென்று பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றனர் (மாநில வாக்காளர் பட்டியலில் இருப்போர் 7.9 கோடி பேர்!); இவர்களில் பெரும் பகுதியினர் சாதாரணக் கூலித் தொழில்களைச் செய்பவர்கள்.

பிகாரில் அமைப்புசாரா, புலம்பெயர் தொழிலாளர்கள்தான் மிகவும் அதிகம். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தத்துக்காகப் பிகாருக்கு ஒரு முறை சென்று திரும்பினால் மட்டுமே இவர்களில் பல லட்சம் பேரால் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க இயலும். ஆனால், இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே திடீரென இப்போது பெருந்தொகை  செலவு செய்து ஊருக்குச் சென்றுவருவதென்பது இவர்களால் இயலாது (எங்கே சென்று வேலை செய்துகொண்டிருந்தாலும் இவர்கள் ஆண்டுக்கொரு முறை, அல்லது ஊர்த் திருவிழா, அல்லது தேர்தல் திருவிழாவின்போது மட்டும்தான் சொந்த ஊருக்குச் சென்றுவருகிறார்கள், செலவுதான் காரணம்).

பிகாரில் வசிப்பவர்களுக்கேகூட ஆதார், குடும்ப அட்டைகள் இருக்கலாம், நிச்சயம் பிறப்புச் சான்றிதழ் போன்ற ‘குடியுரிமையை உறுதி செய்வதற்கான’ சான்றிதழ்கள் கைவசமிருக்க வாய்ப்பு குறைவு. இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

‘ஆதார் அட்டையைக் குடியுரிமை ஆவணமாகக் கொள்ள முடியாது’ என்று தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ‘இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முனைப்புத் திருத்தம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். இதற்கும் வருகிற தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

ஆக, அடுத்தடுத்து தேர்தல் வரப் போகிற ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு... அப்படியே உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என ஒவ்வொன்றாக நாடு முழுவதும் ‘திருத்தம்’ தொடரும் என எதிர்பார்க்கலாம்.

பிகார் மற்றும் வட மாநிலங்கள் மட்டுமல்ல; நாடு முழுவதுமே எத்தனையோ கோடி மக்கள் அவரவர் சொந்த ஊர்களை விட்டுப் பிரிந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குச் சென்று பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் தங்கள் ‘வாக்குரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக’ ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து, ‘கிடைக்காத ஆவணங்களைப்’ பெற்றுத்தர வேண்டும் என்றால் எந்த அளவுக்கு சாத்தியம்?

விளைவு, எதிர்காலத்தில் சொந்த நாட்டிலேயே பல கோடி மக்கள் வாக்குரிமை அற்றவர்களாக – அகதிகளாகப் போகிறார்கள்!

சிறப்பு முனைப்புத் திருத்தத்துக்கு எதிராக அரசியல் கட்சிகளும் தனிநபர்களும் வழக்குத் தொடுக்க, எல்லா மனுக்களையும் ஜூலை 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றையும் சான்று ஆவணங்களாகப் பரிசீலிக்கவும் என்று தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்திருக்கிறது; ஆணையமே 11 ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்டவையாக ஏற்றுக்கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிறப்புச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ் போன்றவற்றை மட்டுமே குடியுரிமைக்கான சான்று ஆவணங்களாகத் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் நிலையில், உள்துறை அமைச்சகம் தொடர்புடைய குடியுரிமை பற்றிய இந்த வேலையை எதற்காகத் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்? என்றும் நீதிபதிகள் சுதன்சு துலியா, ஜெய்மால்ய பக்சி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.

இன்னும் ஒருபடி மேலே சென்று, ‘ஒருவேளை நீங்கள் என்னைக் கேட்டால், (சிறப்புத் திருத்தத்துக்கான) அந்த  ஆவணங்களை என்னால்கூட தர இயலாது. நீங்கள் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள், நான் நடைமுறைச் சாத்தியம் பற்றிப் பேசுகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி சுதன்சு துலியா.

நவம்பரில் பிகாரில் தேர்தல். இந்தத் திருத்த வேலையை இந்தக் குறுகிய கால அவகாசத்தில் செய்து முடிக்க இயலுமா? இத்தனை குறைந்த காலமே இருக்கும் நிலையில் எதற்காக இவ்வளவு அவசரம்? பிகார் வாக்காளர் பட்டியலில் குடியுரிமை அல்லாதோர் இருப்பதாகக் கருதினால் முன்னதாகவே இதுபற்றிய பிரச்சினையை எழுப்பியிருக்கலாமே? – எல்லாம் கேள்விகள்தான்.

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகிய மூன்றையும் அடையாள ஆவணங்களாகச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடு என்று தெளிவுபடுத்திப் பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.

வரும் 21 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையமும் அதற்கு 28 ஆம் தேதிக்குள் மனுதாரர்களும் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள் நீதியரசர்கள். என்ன நடக்கப் போகிறதெனப்  பொறுத்திருந்து பார்க்கலாம்.

அது சரி, பஞ்சாயத்துல தீர்ப்பு வரும்போது வரட்டும், ஆனா, சாமானியர்களுக்கு ஒரு டவுட்டு, பிறகு இன்னாத்துக்குதான் இந்த ஆதார் கார்டு?

ஆதார் அட்டை, அடையாளச் சான்று மட்டுமே; முகவரிச் சான்று அல்ல, வழக்கமான வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கான முகவரிச் சான்றாகப் பயன்படுத்த இயலாது என்று (2012-ல்) நிதித்துறை அமைச்சகம் தெரிவித்தது (இப்போது எப்படி? பாஸ்போர்ட் வாங்கும்போது முகவரிச் சான்றாக எடுத்துக்கொள்கிறார்கள்). பிறந்த தேதிக்கான அதிகாரப்பூர்வ சான்றாகவும் ஆதார் அட்டையைக் கருத முடியாது என்று (2024-ல்)  உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இப்போது ஆதார் அட்டை குடியுரிமைச் சான்று அல்ல என்று தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால்,  எத்தனை இடங்களில் நாம் இந்த ஆதார் எண்ணைக் கொடுத்து வைத்திருக்கிறோம்?

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணையுங்கள் என்றார்கள். அப்புறம் ஆதார் எண்ணுடன் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என ஒரே துன்புறுத்தல். இணைக்காவிட்டால் தண்டம் வேறு. வாக்காளர் அடையாள அட்டையுடன், சிம் கார்டுகளுடன்... எல்லாவற்றுக்கும் ஆதார், ஆதார் இணைக்க வேண்டும். பிறகு விற்று வாங்கும் பத்திரப் பதிவுகளிலும்கூட...

ஆதார் அட்டைகள் உதவுகின்றன, வேறு யாருக்கோ!

ஒரே இடத்தில் ஒருவருடைய ஆதார் எண் கிடைத்தால் போதும். அவருடைய கடன், காசு, பணம், துட்டு, மணி அவ்வளவையும் டிராக் செய்துவிடலாம். ஒவ்வோர் இடத்திலும் ஆதார் எண் என்பதென்னவோ மக்களைக் கண்காணிப்பதற்காக விரிக்கப்பட்டிருக்கும் வலை மாதிரியாகவே அச்சமூட்டுகிறது (பத்தாயிரம், பதினைந்தாயிரம் கோடி ரூபாய் லெவலில் வங்கிகளை ஏமாற்றுவோருக்கு இவையெல்லாம் ஒருபொருட்டே அல்ல!).

இப்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரயில்களில் பயணம் செய்ய தத்கல் டிக்கெட்கூட எடுக்க முடியாது!

(உலக வாழ்வின் இந்தத் தொல்லை, துயரங்கள் எல்லாம் ஒழிந்து இறுதியாகச் சென்று அடங்கிவிட வேண்டுமென்றாலும் எரியூட்டப்பட வேண்டுமென்றாலும் மயான பூமியிலும் ஆதார் அட்டை அவசியம் எனப்படுகிறது - இல்லையென்றால் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை!).

உள்ளபடியே இந்த நாட்டு மக்கள் வைத்துள்ள ஆதார் அட்டைகளால் பெரும் பயனடைந்துகொண்டிருப்பது எண்ணற்ற செல்போன் ‘சேவை’ வழங்கும் நிறுவனங்கள்தான். ஆதார் அட்டை ஒவ்வொன்றும் கண்டிப்பாக ஒரு செல்லிடப்பேசியுடன் இணைக்கப்பட வேண்டியிருக்கிறது. எப்போதோ வாங்கிய இந்த செல்போன் எண்ணை, அதற்காக ஒரு செல்போனை, தேவையே இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரும் தங்களுடன் வைத்திருந்தே ஆக வேண்டும். ஏனென்றால், ஏதாவது மாற்ற வேண்டும் என்றால் இந்த செல்போன் எண்ணுக்குதான் ஓடிபி – ஒன் டைம் பாஸ்வேர்ட் – வரும். இதற்காக ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் நூற்றிச்சொச்சம் ரூபாயை செல்போன் ‘சேவை’ நிறுவனத்துக்கு அழுதே தீர வேண்டும்! இந்தச் செலவு எல்லாருக்கும் கட்டாயம்! (குடும்பத்துக்கு ஒன்று வைத்துக்கொள்ளலாமே என்றும் யாராவது கொடி பிடிக்கலாம்).

அட்டைக்குப் பின்னால் என்ன எழுதியிருக்கிறது பார்த்தீர்களா? அது வெறும் அடையாளம்தானே என்று இப்போது ஆணையத்துக்காகக் கொஞ்சம் பேர் திடீரெனப் புறப்பட்டிருக்கிறார்கள் - பங்குச் சந்தை, காப்பீடு, வங்கிக் கடன் படிவங்களில் கண்ணுக்குத் தெரியாத எழுத்துகளில் எல்லாவற்றுக்கும் நம்மையே பொறுப்பாக்கி எழுதியுள்ள வரிகளைப் போல, மீண்டும் படிக்க வேண்டும்!

இந்த ஆதார் அட்டை வகையில் 2021 வரை நாடு, 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த அலைச்சலுக்காக மக்களும் எவ்வளவோ  செலவு செய்திருக்கிறார்கள், செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது தனிக் கணக்கு.

எல்லாவற்றையும் தந்த பிறகு இதுவொன்றும் குடியுரிமையை உறுதி செய்யாது என்றால்...  வாங்கு வாங்கென அனைவரையும் வாங்க வைத்துவிட்டு, இப்போது அதெல்லாம் நம்பிக்கைக்குரிய ஆவணம் அல்ல என்றால்…

எங்கே சென்றாலும் எதற்காக என்றாலும் ஏதாவது ஓர் ஆவணத்தைக் கேட்கிறார்கள். இது வேண்டும் என்றால் அது, அது வேண்டும் என்றால் இது. இப்படி ஒன்றுக்குள் ஒன்றாக இடியாப்ப நூடுல்கள். முகவரி மாற்ற வேண்டுமா? முதலில் வாடகை ஒப்பந்த பத்திரம், அப்புறம் கேஸ் ஏஜென்சி, அப்படியே ரேஷன் கார்டு, பின்னே ஆதார் கார்டு... என்ன கொடுமை சரவணா?

இன்று உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியுள்ள இந்தியாவில் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பதற்கென தனிச்சிறப்புள்ள சட்டப்பூர்வ ஆவணம் எதையும் இதுவரையிலும் தன் மக்களுக்கு இந்திய அரசு வழங்கவில்லை என்பதுதான் பட்டவர்த்தனமான உண்மை. இந்தத் திசை நோக்கிய பயணம்தான் ஆதார் என்று நினைத்துக்கொண்டிருந்தால் அதுவும் இப்போது ஊற்றிக்கொண்டுவிட்டது.

பெரும்பாலான வெளிநாடுகளில் ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் பிறந்த உடனே  அடையாள அட்டைகள் / எண்கள் உருவாக்கப்பட்டு விடுகின்றன (ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்) ஒருவருடைய உடல்நலப் பிரச்சினைகள் தொடங்கி, பிறப்பு, வாழ்வு, பணி உள்பட அனைத்து வகையான தகவல்களும் (ஓட்டுநர் உரிமம், காப்பீட்டு விவரங்களும்) உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு, எந்த நாட்டிலிருந்து வேண்டுமானாலும் இந்த அடையாள அட்டையைக் கொண்டு ஒருவரை எந்த நாட்டைச் சேர்ந்தவர், யார், எவர் என – வாழ்க்கை வரலாற்றையே எளிதில் அறிந்துகொண்டுவிட முடியும் (சிங்கப்பூர், மலேசியா போன்ற சின்னஞ்சிறு நாடுகளில் எல்லாம்கூட குடியுரிமை அட்டைகள் இருக்கின்றன).

கம்புக்குக் களை வெட்டியதைப் போலாச்சு, தம்பிக்குப் பொண்ணு பார்த்தா மாதிரியும் ஆச்சு என்பதைப் போல, பேசாமல் இந்த ஆதார் அட்டையையே ஒரேயடியாக நம் நாட்டின் குடியுரிமைக்கான அட்டையாக மாற்றுவதற்கு என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசு சிந்திக்கலாம் (ஆணையத்திடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை). பெரும்பாலும் முகவரியில்தான் அவ்வப்போது மாற்றங்கள் செய்ய வேண்டி வரும். இதற்காக சில ஆண்டுகள் – ஆதாருக்கு அவதிப்பட்டதைப் போல - மக்கள் அவதிப்பட்டால்கூட பரவாயில்லை. நிரந்தரமான எண் / குடியுரிமை / ஆவணம் / தீர்வு கிடைத்துவிடும்!

ம். ஆதார் எடுப்பதற்காக மக்களை என்ன பாடுபடுத்தினார்கள்? கண்டிப்பாக இத்தனை நாள்களுக்குள் ஆதாருக்காகப் பதிந்துவிட வேண்டும் என்று எத்தனை முறை தொடர்ந்து எச்சரித்திருப்பார்கள்? வற்புறுத்தியிருப்பார்கள்? எத்தனை காலக்கெடு விதித்திருப்பார்கள்? ஆதார் படம் பிடிக்கும் மையங்களில் எத்தனை மணி நேரம் வரிசையில் நின்று மக்கள் காத்திருந்திருப்பார்கள்? நினைத்தால் எதுவும் இனிக்கவில்லை; கண்ணீர்தான் வருகிறது! இப்போது நடப்பதையெல்லாம் பார்க்க நம்முடன் சேர்ந்து, ஆதார் அட்டையும்கூட ஏதோவொரு மூலையில் ‘சிங்காரித்து மூக்கறுபடும் தன் கதையை’ நினைத்து அழுதுகொண்டிருக்கலாம்!

பாவம் ஆதார்!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

Following the Election Commission's announcement that Aadhaar card is not a proof of citizenship, a debate has begun in the Supreme Court...

கூட்டணி ஆட்சியா?, கூட்டணி அரசா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற மத்திய அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது. அதிமுகவின் மெளனமும் பாஜக மேலிடத்தின் நிலைப்பாடும் இந... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம் நாம்?

நைட் டிரைவ் என்றொரு மலையாளத் திரைப்படம். போலியான வழக்கில் ஒருவரைச் சிக்க வைக்குமாறு ஆய்வாளரிடம் காவல் ஆணையர் தெரிவிப்பார், ‘தலையில் தொப்பி இருக்க வேண்டும் அல்லவா? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்ற எச... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...5 மொழி, கலைகள் எப்படி இருந்தன?

மொழியியல்இந்திய இலக்கியம் சில தடைகளை எதிர்கொண்டாலும் பல புதுமைகளைக் கண்டுள்ளன. நவீன எழுத்தாளர்கள் பண்டைய கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறிப்பாக காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுதியுள்ளனர். கிமு 300ல் ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...4 ஆயுர்வேதம், யோகா எப்படி வந்தன?

மருத்துவம்இந்தியா மருத்துவத்திலும் மிகப் பழங் காலம் முதலே சிறந்து விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன. அதில் முக்கியமானது ஹரப்பா நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு. இதில் மூ... மேலும் பார்க்க

பழம்பெருமைமிகு இந்தியா...3 கணித, அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகள்!

பழங்கால இந்தியாவில் அறிவியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன. அறிவியல்ஐசக் நியூட்டன் 1966ல் ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... டிரம்ப்பின் நோபல் காய்ச்சல்!

“பல பதிற்றாண்டுகளாக ரத்தம் சிந்தப் போரிட்டுக்கொண்டிருந்த காங்கோவுக்கும் ருவாண்டாவுக்கும் இடையே உடன்பாட்டுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து, ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை மகிழ்ச்... மேலும் பார்க்க