அமர்நாத்தில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்: புதிய குழு இன்று புறப்பட்டது!
தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு 6,100 பேர் கொண்ட புதிய குழு திங்கள்கிழமை புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 3-ஆம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரட்டை பாதைகளில் தொடங்கிய 38 நாள் வருடாந்திர யாத்திரை தொடங்கியதில் இருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பகத்ர்கள் குகைக் கோயிலை தரிசனம் செய்தனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி நிறைவடைகின்றது.
சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினரின் துணையுடன், 4,691 ஆண்கள், 1,248 பெண்கள் மற்றும் 17 குழந்தைகள் உள்பட 6,143 பக்தர்களைக் கொண்ட 13வது குழு, பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து அதிகாலை 3:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை 235 வாகனங்களில் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் பக்தர்கள் குழு, 100 வாகனங்களில் 2,215 பக்தர்களை ஏற்றிக்கொண்டு, காண்டர்பால் மாவட்டத்தில் 14 கிமீ பால்டல் பாதையில் புறப்பட்டது, அதைத் தொடர்ந்து அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கிமீ பாரம்பரிய பஹல்காம் பாதை வழியாக யாத்திரை மேற்கொள்ளும் 135 வாகனங்களில் 3,928 பக்தர்களைக் கொண்ட இரண்டாவது குழு, ஜூலை 2ஆம் தேதி முதல், துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்ததிலிருந்து, மொத்தம் 89,101 பக்தர்கள் ஜம்மு அடிப்படை முகாமிலிருந்து பள்ளத்தாக்குக்குப்புறப்பட்டுள்ளனர்.
இதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரையின் இரண்டாவது பதினைந்து நாள்களில் நுழையும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் தொடர்கிறது, 3,500 க்கும் மேற்பட்ட புதிய பக்தர்கள் பயணத்திற்காக ஜம்முவிற்கு வந்துள்ளனர்.