கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் சரோஜா தேவி!
இந்திய திரையுலக வரலாற்றில் அதிக திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான சரோஜா தேவி வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், மல்லேஸ்வரம் பகுதியில் வாழ்ந்து வந்த சரோஜா தேவி (வயது 87), உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பத்ம விருது பெற்றவரும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளிலும் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்து, அபிநய சரஸ்வதி என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரருமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்
13 வயதில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த சரோஜா தேவியை கண்ட இயக்குநர் பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி அவருக்கு படவாய்ப்பு அளித்துள்ளார். ஆனால், அப்போது அந்த வாய்ப்பை சரோஜா தேவி நிராகரித்துவிட்டார்.
பின்னர், 1955 ஆம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இந்திய திரைத்துறையில் 17 வயதில் அறிமுகமானார் சரோஜா தேவி. தான் அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதையும் வென்றார்.
தமிழில் 1956 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திருமணம் திரைப்படம் மூலம் அறிமுகமான சரோஜா தேவி, எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான நாடோடி மன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட திரையுலகின் முக்கிய ஜாம்பவான்களுக்கு நாயகியாக பல படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, ரசிகர்களால் அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 26 படங்களிலும் சிவாஜியுடன் 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் சரோஜி தேவி ஜோடியாக நடித்துள்ளார்.
இவருக்கும் 1967 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
1955 முதல் 1984 வரையிலான 29 ஆண்டுகள் திரைத்துறையின் உச்ச நாயகியாக இருந்த சரோஜா தேவி, கன்னடம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் 161 படங்களில் முன்னணி நாயகியாக நடித்துள்ளார். இந்திய திரையுலகில் எந்த நாயகியும் இத்தனை படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை.
இவரின் திரை வாழ்க்கையைப் போற்றும் விதமாக வாழ்நாள் சாதனையாளர், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
தமிழக அரசு கலைமாமணி விருதும், பெங்களூர் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கி சரோஜா தேவியை கெளரவித்தது.
தனிப்பட்ட வாழ்க்கை
பெங்களூரில் காவல் அதிகாரியின் நான்காவது மகளாக 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் சரோஜா தேவி. இளம்வயதிலேயே சரோஜா தேவியின் திறமையை அடையாளம் கண்ட அவரது தந்தை, நடனம் கற்றுக்கொள்ள ஊக்குவித்துள்ளார்.
1967 ஆம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்ற பொறியாளரை சரோஜா தேவி திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஊக்குவிப்புடன் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.