பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகைதரும் நிலையில், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகைதரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை வழியாக காரில் இருந்தபடியே மக்களைச் சந்திக்கிறார். நண்பகல் 12 மணியளவில் பெருவுடையார் கோயிலை வந்தடைகிறார். கோயில் நுழைவு வாயிலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.
தொடா்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரா், விநாயகா், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெற்று வரும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.