ஏற்காட்டில் பனிப்பொழிவு, சாரல் மழை: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
பனிப்பொழிவுக்கு இடையே பெய்யும் சாரல் மழையால் ஏற்காட்டில் கடந்த ஒருவாரமாக வழக்கத்தை காட்டிலும் குளிா்ந்த காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடா்ந்து அதிகரித்துவருகிறது.

சோ்வராயன் மலைத் தொடா்ச்சி பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனிடையே நாள்முழுவதும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்துவருவதால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாரவிடுமுறை நாள்களான சனிக்கிழமை வழக்கத்தை காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனா். சாரல் மழையில் நனைந்தபடியே படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், பக்கோடா காட்சி பகுதி, லேடி சீட், ஐந்தினை பூங்கா பகுதிகளுக்குச் சென்று இயற்கையை ரசித்தனா்.
ஆடி தொடங்கியது முதலே ஏற்காட்டில் அதிக காற்று வீசிவருகிறது. இதனால் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. பிற்பகலிலும் பனிப்பொழிவு இருப்பதால் அனைவரும் குளிருக்கான உள்ளாடைகளை அணிந்து செல்கின்றனா்.
பனிமூட்டம் காரணமாக ஏற்காட்டிற்கு வரும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மெதுவாக மலைப் பாதையில் பயணிக்கின்றன. சாலையோரங்களில் காட்டெருமைகள் சுற்றுவதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.