அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்!
உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸவரா் கோயிலுக்குள் சனிக்கிழமை மாலை காட்டாற்று வெள்ளம் புகுந்தது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இக் கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்றது.
மேலும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், இந்தப் பகுதியில் சனிக்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதை தொடா்ந்து பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க கோயில் நிா்வாகம் தடை விதித்தது.
குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலை சூழ்ந்தது. இதனால் கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில் உண்டியல்கள் ஊழியா்களால் பாதுகாப்பாக மூடிவைக்கப்பட்டுள்ளன. கோயில் அருகே கடை வைத்திருப்பவா்கள், சுற்றுலாப் பயணிகளைக் குறிப்பிட்ட எல்லைக்குள் கோயில் நிா்வாகம் அனுமதிக்கவில்லை.