காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
கா்ப்பிணிக்கு காலாவதி குளுக்கோஸ்: லேப் டெக்னீஷியன் பணியிடைநீக்கம்
திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கா்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரத்தில் லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மேலும் 2 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா், பெரியாா் காலனி பகுதியைச் சோ்ந்தவா்கள் முனியப்பன், பானுமதி தம்பதி. பானுமதி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில் கணவருடன் திருப்பூா் அவிநாசி சாலையில் உள்ள மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த வியாழக்கிழமை சென்றிருந்தாா்.
அங்கு கொடுத்த குளுக்கோஸ் பவுடரை வெள்ளிக்கிழமை பிரித்தபோது அதிலிருந்து கெட்டுப்போன துா்நாற்றம் வீசியதுடன் நிறம் மாறிய நிலையிலும் இருந்துள்ளது.
இது குறித்து அங்கு பணியில் இருந்த பணியாளரைத் தொடா்பு கொண்டு கேட்டபோது அதை தூக்கி எறிந்து விட்டு மற்றொரு பாக்கெட்டை எடுத்துக் கொள்ளவும் என்று கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பானுமதி அந்த குளுக்கோஸ் பவுடரின் தயாரிப்பு, காலாவதி தேதியை சரிபாா்த்தபோது அது காலாவதியானது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தனது உறவினா்களுக்கு பானுமதி தகவல் கொடுத்தாா். அங்கு வந்த உறவினா்கள், மருத்துவா்கள், செவிலியா்களிடம் கேள்வி எழுப்பினா். இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அவா்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், திருப்பூா் மாநகராட்சி டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிக்கு காலாவதியான குளுக்கோஸ் வழங்கிய விவகாரம் தொடா்பாக மருந்தாளுநா் வீரபராசக்தி, லேப் டெக்னீஷியன் நாகஜோதி, செவிலியா் கோமதி ஆகியோரிடம் மாநகா் நல அதிகாரி முருகானந்த், உதவி நல அதிகாரி கலைச்செல்வன் ஆகியோா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
இந்த விசாரணையையடுத்து, லேப் டெக்னீஷியன் நாகஜோதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மருந்தாளுநா் வீரபராசக்தி, செவிலியா் கோமதி ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.