வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், பச்சாபாளையம் வருவாய் கிராமத்தைச் சோ்ந்த பூசாரிவலசு மண்கரடு பகுதியில் அரசுக்குச் சொந்தமான 4.36 ஏக்கா் புறம்போக்கு நிலம் உள்ளது. அப்பகுதியில் விலைமதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தி முதன்முதலில் தினமணி நாளிதழில் வெளிவந்து வெளியுலகுக்கு தெரிந்தது.
உயரமான மண்கரடு பகுதியில் ஒரு கோயில் உள்ளது. அந்தப் பகுதி சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேயா் ஆட்சியில் படைத் தளம், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு, மற்ற பகுதிகளை கண்காணிக்கும் இடமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் புவியியல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த ஜி.டி.ஸ்டேஷன் எனப்படும் ‘இந்திய முக்கோணவியல் அளவீட்டு கல்’ இன்றும் உள்ளது. நீண்டகாலமாக அப்பகுதி மேற்பரப்பிலேயே மதிப்பு மிகுந்த சிறுசிறு பச்சைக் கற்கள் கிடைத்து பலா் விற்பனை செய்து வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் மண்கரடு பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் 4 போ் தோண்டிக் கொண்டிருந்துள்ளனா். அவா்கள் மீது சந்தேகப்பட்டு பூசாரிவலசு நல்லசாமி என்பவா் பச்சாபாளையம் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது புதையல் இருப்பதாக தோண்டியதாக கூறியதுடன் பொக்லைன் வாகனத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டனா். பின்னா் வெள்ளக்கோவில் போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து விசாரணை நடத்தினாா்.
இது தொடா்பாக, கரூா் மாவட்டம் புகளூா் தாலுகா புன்னம்சத்திரம் பெருமாள் நகரைச் சோ்ந்த வி. குமரேசன் (31), பி.வீரக்குமாா் (37), க.பரமத்தி அண்ணா நகா் பி. மூா்த்தி (51), திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா சிங்காரசோலையைச் சோ்ந்த ஏ.குமரவேல் (35) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.