திருமணமான டிக்டாக் பிரபலத்தை மணமுடிக்க ஆசைப்பட்ட நபர்கள்: மறுப்பு தெரிவித்ததால் கொலை!
டிக்டாக்கில் பிரபலமான பெண்மணி ஒருவரை சில ஆண்கள் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி, அதனால் ஏற்பட்ட தகராறில் அவருக்கு விஷ மருந்து கொடுத்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சுமீரா ராஜ்பூத் என்ற பெண்மணி, டிக்டாக் சமூக ஊடக தளத்தில் மிகப்பிரபலமானவராக அறியப்படுபவர். அவர் டிக்டாக்கில் வெளியிடும் படங்களும் விடியோக்களும் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன. இதனால் அவரை டிக்டாக்கில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
இந்தநிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள பாகோ வா பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, கொல்லப்பட்டதாக கூறப்படும் சுமீரா ராஜ்பூத்தின் 15 வயது மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் கூறியிருப்பதாவது: ‘எனது அம்மாவை திருமணம் செய்துகொள்ளும்படி குறிப்பிட்ட ஆண்கள் சிலர் தொடர்ந்து வற்புறுத்தினர். ஆனால், அதற்கு அவர் இணங்காததால் அவருக்கு விஷ மாத்திரை கொடுத்து கொன்றனர். இதை எனது கண்களால் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜனநாயக நாடாக அறியப்பட்டாலும், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுவது தொடர்கதையாகிவிட்டது.
17 வயதே நிரம்பிய இளம்பெண்ணான சனா யூசப்(இவரும் ஒரு டிக்டாக் பிரபலம்) என்பவர் கடந்த மாதம் அவரது வீட்டில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில், இன்னொரு டிக்டாக் பிரபலம் இப்போது மரணமடைந்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் பாகிஸ்தான் பெண்களிடையே மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.