உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவினரை நியமிக்க முயற்சி: அதிமுக வழக்கு
உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகளாக திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரவினரை நியமிக்க அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
தமிழகத்தில் அரசு உதவி செய்தி தொடா்பாளா்கள் நியமனம் தொடா்பான விதிகளில் திருத்தம் செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிா்த்து சீனிவாச மாசிலாமணி என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா் அணி செயலா் ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்துக்கு பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்துத் தோ்வு நடத்தாமல் பெயரளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடையும் நோக்கில் இந்த பணியிடங்களில் திமுகவைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவினரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியானவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, விதிகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக உதவி மக்கள் தொடா்பு அதிகாரிகள் நியமனத்தைத் தடுக்க வேண்டும். எனவே, ஏற்கெனவே இதுதொடா்பாக சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்துள்ள மனுவில் தன்னையும் ஒரு தரப்பாக சோ்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.