திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்
சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இவ் விழா, திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா மாநாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சிகள், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு, ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்குகிறது. காலை 9 மணிக்கு, முனைவர் சாரதா நம்பி ஆருரன் தலைமையில் திருமுறைத் தேனரங்கம், பகல் 12 மணிக்கு முனைவர் தி.ராஜகோபால் தலைமையில் மாறா அருளரன் அரங்கம், மாலை 4.30 மணிக்கு பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் தலைமையில் எழிலுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு, ரேகா மணி எழுதிய "சேக்கிழார் வழியில் அன்புசெய் அடியார்கள்' என்ற நூலை திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டு ஆசியுரை வழங்குகிறார்.
நூல்கள் வெளியீடு: விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 9.45 மணிக்கு, சிவாலய தேவார ஒளிநெறி மற்றும் கட்டுரைகள்- 15 நூல்கள் வெளியிடப்படுகின்றன. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ஆய்வுரை வழங்குகிறார். பிற்பகல் 2.45 மணிக்கு கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் மாணவர் உரையரங்கம் நடைபெறுகிறது.
விருது, பரிசளிப்பு: மாலை 5.45 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜெகதீசன் வரவேற்புரையாற்றுகிறார். திருமயிலை ரசிக ரஞ்சனி சபா தலைவர் ஏ.ஆர்.சந்தானகிருஷ்ணன் விருதுகளை வழங்கி தலைமையுரையாற்றுகிறார். மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சிறப்புரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் சொற்பொழிவாற்றுகிறார்.
திருவருட்பா மூலமும், உரையும் வெளியீடு: மூன்றாவது நாளான சனிக்கிழமை காலை 11.15 மணிக்கு, திருவருட்பா மூலமும், தமிழறிஞர் ஒüவை சு.துரைசாமிப் பிள்ளையின் உரையும் (10 தொகுதிகள்) நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நூலை வெளியிட்டும், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டும் ஆசியுரை வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சக்தி குழும நிர்வாக இயக்குநர் ம.பாலசுப்பிரமணியம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் ஹரி தியாகராஜன், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், திருமயிலை ரசிக ரஞ்சனி சபா இயக்குநர் ரா.நாகராஜன் ஆகியோர் பேசுகின்றனர்.
அதைத் தொடர்ந்து, மாலை 3 மணிக்கு பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரையாற்றுகிறார். மாலை 3.45 மணிக்கு கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு பெரியபுராணத்தில் நயம் என்ற தலைப்பில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் துணைத் தலைவர் தெ.ஞானசுந்தரம் சிறப்புரையற்றுகிறார்.
மாலை 6.45 மணிக்கு, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் ஆய்வரங்கம் நடைபெறுகிறது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள், முனைவர் த.இராமலிங்கம், தமிழ்நாடு பாடநூல் கழக உதவி இயக்குநர் ப.சரவணன் ஆகியோர் பேசுகின்றனர்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.