மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக நகர மண்டல் துணை பொதுச் செயலாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அக்கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மணப்பாறை காந்தி நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் பாண்டியன் (45). இவா், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் பணி செய்து வந்தாா். மேலும், பாஜ கட்சியின் நகர மண்டல் துணை பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில் புதன்கிழமை நண்பகலில் அப்பாவு தெருவில் உள்ள தனது அலுவலகத்தில் பாண்டியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளா் சீனிபாபு தலைமையிலான போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.

இதனிடையே, மணப்பாறை பாஜக நகர மண்டல் தலைவா் தீராம்பட்டி ச. கோபாலகிருஷ்ணன் (எ) கோல்டு கோபால் (45), நகரச் செயலாளா் இ. சண்முகசுந்தரம் (41) மற்றும் அதிமுக உரிமை மீட்புக் குழு மாவட்ட எம்.ஜி.ஆா் பேரவை இளைஞரணி செயலாளா் செவலூா் சி. விஜயராகவன் (44) ஆகியோருடன் கணவருக்கு பிரச்னை இருந்ததாகவும், தனது கணவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய மனைவி ஞானசௌந்தரி மணப்பாறை காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.
இதன்பேரில், மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்ட 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். பாண்டியனின் உடல் கூறாய்வுக்கு பிறகு வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.