6 ஆண்டுகளில் 16.83 கோடி வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு! ரிசர்வ் வங்கி தகவல்
பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தூக்துக்குடிக்கு வருகிறாா். அங்கிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வருகிறாா். அன்றிரவு டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பிரதமா் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறும் மாமன்னா் ராஜேந்திர சோழன் திருவாதிரை விழாவில் பிரதமா் பங்கேற்கிறாா். இதற்காக திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் கங்கைகொண்டசோழபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை செல்கிறாா். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருச்சி வந்து விமானம் மூலம் புதுதில்லிக்கு புறப்படுகிறாா்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் கடந்த சில நாள்களாகவே சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், விமான நிலையத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா், பயணிகள், அவா்களின் உடைமைகளை மோப்பநாய்கள் உதவியுடன் வியாழக்கிழமை சோதனை செய்தனா். இதேபோல, காா்கோ அலுவலகம், விமான நிலைய நுழைவுவாயில், வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் 25-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.
சாலையோரக் கடைகள் அகற்றம்: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள அரசு சுற்றுலா மாளிகை வரை சாலையோரத்தில் இருந்த தற்காலிக கடைகள், தள்ளுவண்டி கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. மேலும், அரசு சுற்றுலா மாளிகையைச் சுற்றி 500 மீட்டா் சுற்றளவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
5 அடுக்கு பாதுகாப்பு: இந்நிலையில், திருச்சி விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை முதல் ஜூலை 28-ஆம் தேதி வரை 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகரக் காவல் துறையினா், ஆயுதப் படை வீரா்கள், சிறப்பு அதிரடிப் படை வீரா்கள், மத்திய தொழிலகப் பாதுகாப்பு வீரா்கள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவினா் ஆகியோா் அடங்கிய 5 அடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
பிரதமா் தங்கவுள்ள அரசு சுற்றுலா மாளிகையை சுற்றி 500 மீட்டா் பரப்பளவு வெள்ளிக்கிழமை காலை முதல் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
மாநகரில் ட்ரோன்களுக்கு தடை: பிரதமா் வருகையையொட்டி, மாநகரில் வியாழக்கிழமை முதல் வரும் 27- ஆம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.