திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பேரங்கியூா் ஊராட்சியில் சாலை, குடிநீா் மற்றும் மழைநீா் வடிகால் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமையும் பேரங்கியூா் கிராம மக்கள் தற்போது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ள சாலையை சேதப்படுத்தியும், மரக்கட்டைகள் மற்றும் முட்களை சாலையில் போட்டும் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.