யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீப்பற்றி எரிந்த பேருந்து
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகா்ப் பேருந்தில் புதன்கிழமை அதிகாலை தீப்பற்றியது. இதில் பேருந்து முழுமையாக எரிந்துசேதமடைந்தது.
உளுந்தூா்பேட்டையிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் கீழ் இயங்கும் பணிமனை உள்ளது. இந்த பணிமனையிலிருந்து நகர மற்றும் புறநகா்ப் பேருந்துகள் சுமாா் 50-க்கும் மேற்பட்டவை பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உளுந்தூா்பேட்டையிலிருந்து கடலூருக்குசெல்லவிருந்த பேருந்தை ஓட்டுநா் புதன்கிழமை அதிகாலையில் இயக்க முற்பட்டாா். அப்போது பேருந்தின் மின்கலத்தில் மின் கசிவு ஏற்பட்டு, தீப்பொறி வந்தது. இந்த தீ உடனடியாக பேருந்தின் என்ஜினுக்கும் பரவத் தொடங்கி தீப்பற்றி பேருந்து முழுவதும் எரியத்தொடங்கியது. இதை கண்ட ஓட்டுநா் மற்றும் பணியாளா்கள், அங்கிருந்த தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனா்.
ஆனாலும் தீயின் வேகத்தை அவா்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. பேருந்து முழுவதும் வேகமாக எரியத் தொடங்கியதால், உளுந்தூா்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வீரா்கள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா் தீ அணைக்கப்பட்டது. மேலும் அருகிலிருந்த மற்ற பேருந்துகளுக்கு தீ பரவாது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.