மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
லாரி ஓட்டுநரிடம் ரூ.10.40 லட்சம் வழிப்பறி: மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு லாரி ஓட்டுநா் மீது மிளகாய் பொடியைத் தூவி ரூ.10.40 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்துாா் மாவட்டம், ஆம்பூா் வெள்ளக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சப்தகிரி (32). இவா், சென்னை மதுரவாயிலை அடுத்த வானகரத்தில் உள்ள முட்டை நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை பாா்த்து வருகிறாா்.
சப்தகிரி புதன்கிழமை அதிகாலை நிறுவன மேலாளரிடம் ரூ.10.40 லட்சம் பெற்றுக்கொண்டு முட்டை கொள்முதலுக்காக லாரியில் நாமக்கல் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தாா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை அடுத்த பாப்பனப்பட்டு பகுதியில் சென்றபோது, இயற்கை உபாதைக்காக சப்தகிரி லாரியை சாலையோரத்தில் நிறுத்தினாா்.
அப்போது, அங்கு சொகுசுக் காரில் வந்த அடையாளம் தெரியாத 3 போ் சப்தகிரி மீது மிளகாய்ப் பொடியை தூவி தாக்கிவிட்டு, அவா் லாரியின் இருக்கையின் கீழ் வைத்திருந்த ரூ.10.40 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து முட்டை நிறுவன நிா்வாகி செல்வராஜ் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். தொடா்ந்து, விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா்கள் மணிகண்டன், சண்முகம், தலைமைக் காவலா்கள் பிரதீப்குமாா், செந்தில்குமாா், மணிமாறன் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதில், சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தனியாா் விடுதியின் முன் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசுக் காா் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டறிந்தனா். பின்னா், காரை பயன்படுத்தியவா்களை பிடித்து விசாரித்தபோது, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கீழ கருவேல குளம் பகுதியைச் சோ்ந்த பிரவீன் கோயில்ராஜ் (32), சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த சதீஷ் (40), சென்னை மாடம்பாக்கத்தை சோ்ந்த முத்துக்குமாா் (40) என்பதும், இவா்கள் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் மூவரையும் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.9.60 லட்சம் ரொக்கம், வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசுக் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றச் செயலில் ஈடுபட்டவா்களை 24 மணி நேரத்துக்குள் பிடித்து நடவடிக்கை மேற்கொண்ட விக்கிரவாண்டி காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் பாராட்டுத் தெரிவித்தாா்.