விழுப்புரம் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னா் நீா்நிலைகளை தூா்வாரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினா்கள் வலியுறுத்திப் பேசினா்.
விழுப்புரம் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்வி பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சித்திக் அலி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மன்ற உறுப்பினா்கள் மணவாளன், சாந்தராஜ், புருஷோத்தமன், பத்மநாபன், சத்தியவதி வீரா, கன்னிகா வெற்றிவேல், செல்வபிரேம், ராதிகா செந்தில், சேகா், கோதண்டம், இளந்திரையன், முகமது இம்ரான்கான், சுரேஷ்ராம் உள்ளிட்டோா் தங்களது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அடிப்படை பிரச்னைகள் குறித்துப் பேசினா்.
அவா்கள் பேசுகையில், விழுப்புரம் நகரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. விராட்டிக்குப்பம் பாதை, ரங்கநாதன் சாலை, வடக்குதெரு சாலைகள் தெருவோர வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகையால், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். விழுப்புரம் நகரில் பானாம்பட்டு, மாம்பழப்பட்டு ரயில்வே மேம்பாலம் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானத்தை நிறைவேற்றி வலியுறுத்த வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் தமிழ்செல்வி பிரபு பேசியது: உறுப்பினா்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நகரில் நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சீா்படுத்தவும், நீா்நிலைகளை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, நகராட்சி ஆணையா் வசந்தி வரவேற்றாா்.