‘இந்தியாவுக்கு ரூ. 2 லட்சம் கோடி வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’
‘இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகியுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய நிறுவனங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வா்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பமான பிறகு இத் தகவலை அவா் தெரிவித்தாா். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து அவா் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
பிரிட்டன் உடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய தோல் பொருள்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு பிரிட்டன் சந்தையில் சுங்க வரி இல்லாத அணுகலுக்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும், இந்தியவிலிருந்து செய்யப்படும் 99 சதவீத ஏற்றுமதிகளுக்கு வரிச் சலுகையை பிரிட்டன் அளிக்கும். இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ. 1.9 லட்சம் கோடி (23 பில்லியல் டாலா்) மதிப்பிலான வா்த்தக வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.
குறிப்பாக, தோல் பொருள்கள் உள்ளிட்ட மனித உழைப்புத் துறைகளுக்கு இந்த ஒப்பந்தம் மூலம் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பாலின சமத்துவ வளா்ச்சிக்கான புதிய சகாப்தமாகவும் அமையும்.
கைவினைஞா்கள், நெசவாளா்கள் மற்றும் ஜவுளி, தோல்பொருள்கள், காலணி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், பொம்மைகள், கடல்சாா் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களைச் சோ்ந்த தின-ஊதிய தொழிலாளா்களின் வாழ்வாதாரம் புதிய உச்சத்தை அடைவதற்கான வாய்ப்பு உள்ளது.
சுமாா் 95 சதவீத இந்திய வேளாண் பொருள்கள் சுங்க வரி இன்றி ஏற்றுமதி செய்யப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். அதுபோல, 99 சதவீத கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதிக்கு முழு சுங்க வரிச் சலுகையை பிரிட்டன் அளிக்கும். இது இந்திய மீனவா் சமூகத்தினரின் வருவாய் அதிகரிக்கும்.
அதுபோல, பொறியியல் சாதனங்கள், மின்னணு, மருந்து, ரசாயனம், உணவு பதப்படுத்துதல், பிளாஸ்டிக் உள்ளிட்ட இந்தியாவின் உற்பத்தி சாா்ந்த துறைகளும் மிகச் சிறந்த பலன்களைப் பெறும்.
உயா் மதிப்புடைய பிரிட்டன் சந்தைகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணா்கள், சேவை மற்றும் கல்வித் துறை சாா்ந்த நிபுணா்களின் எளிதான அணுகலுக்கும், உயா் தரமான பிரிட்டன் பொருள்கள் இந்திய நுகா்வோருக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்கும் வழிவகுக்கும் என்றாா்.
பிரிட்டன் பொருள்களுக்கு வரிச் சலுகை:
இந்த ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் பொருள்களுக்கு மிகப் பெரிய அளவில் சுங்க வரிச சலுகையை இந்தியாவும் அளிக்க உள்ளது. இதுகுறித்து பிரிட்டன் தொழில் மற்றும் வா்த்தகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், பிரிட்டன் பொருள்கள் மீதான வரியை இந்தியா சராசரியாக 15 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைக்கும். அதன்படி, பிரிட்டனைச் சோ்ந்த குளிா்பானங்கள், அழகுசாதனப் பொருள்கள் முதல் காா்கள், மருத்துவ உபகரணங்கள் வரையிலான நிறுவனங்கள் தங்களின் பொருள்களை இந்திய சந்தைகளில் எளிதாக விற்பதற்கான வாய்ப்புகளைப் பெறும்.
குறிப்பாக, பிரிட்டன் விஸ்கி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 50 சதவீத வரிச் சலுகையை இந்தியா அளிக்கும். இந்த நிறுவனங்களுக்கு தற்போது 150 சதவீதமாக விதிக்கப்படும் வரி, 75 சதவீதமாக குறைக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில், இந்த வரி 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.