அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து
அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்பத் தரவும் உத்தரவிட்டது.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியிடமிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு பெற்ற ரூ.30 கோடி கடனை தனக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் என்.ரவிச்சந்திரன் மற்றும் அவா் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2021-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. சிபிஐ தொடா்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ரவிச்சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரவிச்சந்திரனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அதில், ரூ.15 லட்சத்தை சிபிஐ-க்கும், ரூ.15 லட்சத்தை சமரசத் தீா்வு மையத்துக்கும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்பத் தரக்கோரி ரவிச்சந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ பதிவு செய்திருந்த மூல வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கையும் ரத்து செய்வதாகக் கூறி உத்தரவிட்டனா். மேலும், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.