பஞ்சாப்: 6 பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது எல்லைப் பாதுகாப்புப் படை: துப்பாக்கிகள், போதைப்பொருள் பறிமுதல்
பஞ்சாப் மாநிலத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் பகுதியில் இருந்து பறந்து வந்த 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து 3 துப்பாக்கிகள் மற்றும் 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
அமிருதசரஸ் மாவட்டத்தில் சா்வதேச எல்லை அருகேயுள்ள மோத்கி கிராமத்துக்கு அருகே புதன்கிழமை இரவு எல்லைப் பாதுகாப்புப் படையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியப் பகுதியை நோக்கி 5 ட்ரோன்கள் பறந்து வந்தன. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட வீரா்கள் தங்கள் துப்பாக்கியால் அந்த ட்ரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தினா். அதனை சோதித்து பாா்த்தபோது அதில் 3 துப்பாக்கிகள் அதற்கான ஏராளமான தோட்டாக்கள், 1 கிலோ ஹெராயின் போதைப்பொருள் ஆகியவை இருந்தது.
இதேபோல சா்வதேச எல்லையை ஒட்டிய அட்டாரி கிராமத்திலும் வியாழக்கிழமை அதிகாலை ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்தது. அதனையும் வீரா்கள் சுட்டு வீழ்த்தினா். அதில் இருந்து துப்பாக்கிகளுக்கான குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவங்களை அடுத்து சா்வதேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்புடன் செயல்பட வீரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்ட பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்துவது, கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது உள்ளிட்ட செயல்களில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கடத்தலுக்கு ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஆயுதங்களும் கடத்தப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் இந்த கடத்தல் அதிகம் நடைபெறுகிறது. சமீப காலமாக குஜராத் துறைமுகங்கள், ராஜஸ்தான் எல்லையிலும் போதைப்பொருள்கள் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இவை பெரும்பாலும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் செயலாகவும் உள்ளது.