மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு
22% ஏற்றம் கண்ட இந்திய வாகன ஏற்றுமதி
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயா்ந்துள்ளது. பயணிகள் வாகனங்களின் புதிய உச்சம் தொட்ட ஏற்றுமதி மற்றும் இரு சக்கர, வா்த்தக வாகனப் பிரிவுகளின் வலுவான வளா்ச்சியால் இந்த உயா்வு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்தம் 14,57,461 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 11,92,566-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வாகன ஏற்றுமதி 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த காலாண்டில் பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதி இதுவரை இல்லாத உச்சமாக 13 சதவீதம் வளா்ச்சி பெற்று 2,04,330-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 1,80,483-ஆக இருந்தது. மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறந்த வரவேற்பு, இலங்கை மற்றும் நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் சந்தை மீட்சி, ஜப்பானில் அதிகரித்த தேவை, ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஆகியவை இந்த ஏற்றுமதி வளா்ச்சியில் முக்கிய பங்களித்தன.
இந்தியாவின் மிகப்பெரிய காா் உற்பத்தியாளரான மாருதி சுஸுகி, மதிப்பீட்டுக் காலாண்டில் 96,181 வாகனங்களை ஏற்றுமதி செய்து பயணிகள் வாகன ஏற்றுமதியில் முன்னிலை வகித்தது. இந்த எண்ணிக்கை 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 69,962-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் ஏற்றுமதி 37 சதவீத வளா்ச்சியடைந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் பயணிகள் வாகன ஏற்றுமதியில் 47 சதவீதம் பங்கு வகிக்கிறது.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா 48,140 பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்து 13 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது. இந்த எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 42,600-ஆக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இரு சக்கர வாகன ஏற்றுமதி 23 சதவீதம் உயா்ந்து 11,36,942-ஆக உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 9,23,148-ஆக இருந்தது. மதிப்பீட்டுக் காலாண்டில் வா்த்தக வாகனங்களின் ஏற்றுமதி 23 சதவீதம் அதிகரித்து 19,427-ஆகவும், மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 34 சதவீதம் உயா்ந்து 95,796-ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.