பாலுறவு வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தல்
பாலுறவு சம்மத வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா்.
இளம் பருவத்தில் சம்மதத்துடன் காதல் உறவுகளில் ஈடுபடுபவா்களையும், வலுக்கட்டாயமாக பாலியல் சீண்டலில் ஈடுபடுவா்களையும் ஒரே மாதிரியாக போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் தகவல்களை வெளியிடக் கூடாது என்ற உத்தரவிடப்பட்ட நிபுண் சக்சேனா வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘கடந்த 70 ஆண்டுகளாக பாலுறவு வயது 16-ஆகத்தான் இருந்தது. 2013-இல் நீதிபதி வா்மா குழுவின் பரிந்துரையின்பேரில் எந்தவித விவாதமுமின்றி இது உயா்த்தப்பட்டது.
2017 முதல் 2021 வரையில் பாலியல் வழக்குகளில் 16 முதல் 18 வயதுடைய சிறாா் போக்ஸோவில் தண்டிக்கப்படுவது 180 சதவீதம் அதிகரித்துள்ளது.
இளம் வயது ஆண் சிறாா் போக்ஸோவில் தண்டிக்கப்படுவதற்கு மும்பை, சென்னை, மேகாலயா உயா் நீதிமன்ற நீதிபதிகள் பல வழக்குகளில் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
பாலியல் சீண்டல் மற்றும் சம்மத்துடன் பாலுறவு ஆகிய இரண்டையும் வேறுபடுத்த சட்டம் தேவை என்று இந்த நீதிமன்றங்கள் வலியுறுத்தியுள்ளன. ஆகையால், இளம் வயதினரிடையே சம்மதத்துடனான பாலுறவுக்கு போக்ஸோ மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளாா்.