பிரதமா் நாளை தூத்துக்குடி வருகை: 2100 போலீஸாா் பாதுகாப்பு
தூத்துக்குடிக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) வருவதை முன்னிட்டு 2100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமா் மோடி வருகிற 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறாா்.
தொடா்ந்து, சா்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவா் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமாா் தலைமையில் சுமாா் 80 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம், தென்மண்டல ஐஜி பிரேமானந்த் சின்ஹா, நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சந்தோஷ் ஹாதிமணி ஆகியோா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ்.பி.க்கள் தலைமையில் சுமாா் 2100 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனா்.
ட்ரோன்களுக்கு தடை: முன்னதாக மாவட்டம் முழுவதும் வருகிற 27ஆம் தேதி காலை வரையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவா்கள் குறித்த விவரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபா்கள் குறித்தும் கடந்த 3 நாள்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.